சனி, 29 ஏப்ரல், 2017

உச்சநீதிமன்றம் : அமைச்சர் காமராஜ் மீது பண மோசடி வழக்கு ..தமிழக அரசுக்கு எச்சரிக்கை

சென்னை: திருவாருர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.வி.எஸ் குமார். இவரிடம் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது நன்னிலம் தொகுதியில் வேட்பாளாரகாக போட்டியிட்ட தற்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தேர்தல் செலவுக்காக ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு கைமாறாக காமராஜ், குமார் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக உறுதியளித்துள்ளார். இதை நம்பி கமராஜிடமும், அவரது உறவினர் ராமகிருஷ்ணனிடமும் குமார் பணத்தை கொடுத்துள்ளார். இதன்பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜ் நீண்ட நாட்களாகியும் குமாரின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அதனால் குமார் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட காரணத்திற்காக அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதனையடுத்து குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் காமராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கும்படி குமாருக்கு உத்தரவிட்டது. இதன்பின்னர் குமார் மன்னார்குடி டி.எஸ்.பியிடம் காமராஜ் மற்றும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை பெற்று கொண்ட டி.எஸ்.பி குமாரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் பிடுங்கி கொண்டு ஊரை விட்டு விரட்டியடித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இதுகுறித்து குமார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி புகார்தாரர் மீது நடந்த கொடுமைக்கு தமிழக அரசு சார்பாக என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இனி  என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளீர்கள்.  என வருகின்ற புதன்கிழமைக்குள் உச்சநீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இதை அளிக்கத் தவறினால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார். என்று எச்சரித்து வழக்கை வருகின்ற 3ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்  தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக