செவ்வாய், 4 ஏப்ரல், 2017

உழவனின் துன்பத்தை எத்தனை அறிவுஜீவிகள் பேசுகிறார்கள்? அய்யாகண்ணுதான் பேசுகிறார்

  நூறு ஏக்கர் நிலம் கொண்ட ஒருவன் அரை நிர்வாணக் கோலத்தில் எலியைக் கடித்துக் கொண்டு உழவனுக்காக குரல் எழுப்புகிறான் என்றால் அவனை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் போற்றலாம்.
nisaptham.com   : அய்யாகண்ணு யாரென்று தெரியாது. அவர் பின்னணியும் தெரியாது. எலியைக் கடித்தபடி கோவணத்தைக் கட்டிக் கொண்டு அவரும் அவரைச் சார்ந்தவர்களும் போராடுகிற படங்கள் வெளியான போது ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இவர் ஒன்றுதான்’ எனத் தோன்றியது. ஆனால் அவர் அப்படியான மனிதராகத் தெரியவில்லை. உறுதியாக நிற்கிறார். இந்த தேசத்தில் ஒவ்வொருவராக அவரைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கிய போது சேறை எடுத்து அடிக்க ஆட்கள் தயாரானார்கள். அவர் பணக்காரர் என்கிறார்கள். ஆடி கார் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது என்கிறார்கள். எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும். யாரோ சாவி கொடுக்க தலையாட்டும் பொம்மையாகவே இருக்கட்டும். ஆனால் அவர் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் உன்னதமானவை. செவி சாய்க்கப்பட வேண்டியவை. உடனடியாக தீர்வுகள் எட்டப்பட வேண்டியவை. மறுக்க முடியுமா என்ன?
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உழவன் கிட்டத்தட்டச் செத்துக் கொண்டிருக்கிறான். மிகைப்படுத்திச் சொல்வதற்காகச் சொல்லவில்லை. நம்முடைய உறவினர்களில் ஒருவரேனும் விவசாயியாக இருக்கக் கூடும். அழைத்துப் பேசிப் பார்க்கலாம். தண்ணீர் இருக்கிறதா? வேளாண்மை எப்படி இருக்கிறது? விளைச்சல் இருக்கிறதா? என்றெல்லாம் விசாரிக்கலாம். விசாரித்தால் நிலைமை புரியும். விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை என்பதெல்லாம் இப்பொழுது பிரச்சினையே இல்லை. விளைச்சலே இல்லை என்பதுதான் நிதர்சனம். 
எல்லா வழிகளும் அடைப்பட்டுக் கிடக்கும் போது எப்படி பிழைப்பான் குடியானவன்? இந்தக் கோடையிலும் வறட்சியிலும் அவர்கள் படுகிற துன்பங்கள் கொடூரமானவை. கேட்கச் சகிக்காதவை. இங்கே வேளாண்மைக்கு நீர் இல்லை. கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லை. கருகிக் கிடக்கின்றன பயிர்கள். வாட்டி எடுக்கிறது வெம்மை. இந்த லட்சணத்தில் இன்னமும் சித்திரை, அக்னி நட்சத்திரத்தையெல்லாம் தாண்டி அவன் பிழைத்தாக வேண்டும். என்னதான் செய்வான்? 
இங்கே உழவனின் துன்பத்தை எந்த ஊடகம் பதிவு செய்கிறது? எத்தனை அறிவுஜீவிகள் பேசுகிறார்கள்? அய்யாகண்ணுதான் பேசுகிறார். அய்யாகண்ணு அயோக்கியனாகவே இருந்தாலும் அவரது போராட்டம் காலத்தின் தேவை. உழவனின் குரலை தலைநகரில் உரக்கக் கத்தும் ஒரு மனிதன் மீது எவ்வளவுதான் குற்றச்சாட்டுகளை அள்ளி இறைத்தாலும்- அவை உண்மையாகவே இருந்தாலும் கூட- அவரைக் காக்க வேண்டியதன் அவசியம் இருப்பதாக உணர வேண்டும். இவர்களைப் போன்றவர்களின் வழியாகவாவது வேளாண் தொழில் செய்கிறவர்களின் வலியையும் வேதனையும் அடுத்தவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
வேளாண்மைத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தானே வருகிறது? பிறகு ஏன் டெல்லியில் போராடுகிறார்கள் என்கிறார்கள். காவிரி மேலாண்மைக் குழுவை மாநில அரசா அமைக்கப் போகிறது? மத்திய அரசுதானே செய்ய வேண்டும்? நதிகள் இணைப்புக்கான முன்னெடுப்பை தமிழக அரசா செய்யப் போகிறது? நடுவண் அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? ‘எங்கள் மாநிலம் காய்ந்து கிடக்கிறது..பிச்சையிடுங்கள்’ என்று மாநில அரசு கோரிக்கை வைத்தால் கிள்ளித் தருகிறது மத்திய அரசு. வறட்சி நிவாரணமாக நாற்பதாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என தமிழக அரசு கேட்டது. அவ்வளவு கொடுக்காவிட்டால் தொலைகிறது. வெறும் ஆயிரத்து எழுநூறு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் நாக்கை நீட்டச் சொல்லி நக்கிக் கொள்ளச் சொன்னாலும் கூட போதாது. கூட்டுறவு வங்கிக் கடனை மாநில அரசு கவனிக்கலாம். நாட்டுடைமயாக்கப்பட்ட வங்கிகளில் உழவர்கள் பெற்ற கடனை மத்திய அரசுதானே பரிசீலிக்க வேண்டும்?
அய்யாகண்ணுவும் அவரது குழுவினரும் என்ன கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் மத்திய அரசுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்று கேட்கிறவர்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளை மத்திய அரசினால்தான் நிறைவேற்ற முடியும். பிரதமர், நிதியமைச்சர், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் என எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதனால் டெல்லியில் போராடுகிறவர்கள்.
அய்யாகண்ணுவுக்கு எதிராகப் பேசுகிறவர்கள் சொல்வதைப் போல இந்தக் குழுவினர் எடுத்த உடனே டெல்லி சென்று இறங்கவில்லை. இதே விவசாயிகள் குழுதான் டெல்டா மாவட்டங்களில் போராடினார்கள். பின்னர் சென்னை எழும்பூரில் எலியைக் கடித்துக் கொண்டு அரை நிர்வாணமாக நின்று போராடினார்கள். நாம்தான் சசிகலாவா, ஓபிஎஸ்ஸா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டோம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு எடுபிடி அரசாங்கத்தை நம்பிப் பலனில்லை என்றுதான் ரயில் ஏறினார்கள். இன்றைக்கு வந்து ‘ஏன் டெல்லியில் போராடுகிறார்கள்?’ என்று கேட்கிறவர்களுக்கு இந்த விவரமெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை.
டெல்லியில் விதவிதமாக தனது போராட்டத்தை வடிவமைத்து தேசத்தின் கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கொடுக்கப் பதறுகிறார்கள் பாவிகள். மத்திய அரசைக் காப்பதாக நினைத்து உழவனைக் கீழே போட்டு மிதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏ.சி அறையை விட்டு நிலத்தில் இறங்கிப் பார்த்தால்தான் உழவனின் சிரமங்கள் தெரியும். 
விவசாயிகள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவர்களுக்கு ஏன் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனசாட்சியில்லாமல் பேசுகிறவர்கள் இன்னமும் இருக்கத்தானே செய்கிறார்கள்? உழவனின் வாழ்வாதாரப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் மேம்போக்காக பேசினால் ரத்தம் கக்கித்தான் சாக வேண்டும்.
இருக்கிறார்கள்- பொறியாளராகவும், மருத்துவராகவும், அரசு ஊழியராகவும் இருந்து கொண்டு உழவன் என்ற போர்வையில் தமது விவசாய நிலங்களைக் காட்டி வறட்சி நிவாரண நிதி வாங்கிக் கொண்டு மலத்தில் அரிசி பொறுக்கும் சில்லரைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து கழுவிலேற்றினாலும் தவறில்லை. இதே போன்ற ஆட்கள் கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் பெற்று அதைத் தள்ளுபடி செய்கையில் பலனை அனுபவித்தால் அவர்களைத் துணியை உருவிவிட்டு நிர்வாணமாக ஓட விட்டாலும் தகும். ஆனால் நிலத்தையும் கால்நடையையும் மட்டுமே நம்பி வாழ்கிற ஏழைப்பட்ட விவசாயிக்கு ‘ஏன் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று யாராவது கேட்டால் அடி ஆழத்திலிருந்து சாபம் விட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
உழவன் என்றாலே ஜமீன் என்று அர்த்தமில்லை. பண்ணையார்கள் மட்டுமே விவசாயிகள் இல்லை. கால் ஏக்கரும், அரை ஏக்கரும் வைத்துக் கொண்டு ஒருவேளை கஞ்சிக்கு வாழ்நாள் முழுவதும் அந்நிலத்தை நம்பி வாழ்கிற உழவர்கள்தான் இங்கே அதிகம். இந்த தேசத்தில் துர்பாக்கிய வர்க்கங்களில் உழவனும் ஒருவன். மழை பொய்த்து நிலம் காய்கையில் நமக்கு குடிநீரும் குண்டி கழுவும் நீரும்தான் பிரச்சினையாகத் தெரியும். ஆனால் உழவனுக்கு தன் வாழ்க்கையே சுண்டிப் போகிறது. இந்தச் சூழலில் ஏழை உழவனின் குரலை டெல்லியில் பதிவு செய்யும் அய்யாகண்ணு எவ்வளவு மோசமான மனிதன் என்று இவர்கள் சொன்னாலும் அம்மனிதனை மனப்பூர்வமாக வணங்கவே தோன்றுகிறது. அவரைப் போன்றவர்களும் இல்லையென்றால் இங்கே உழவனை ஏன் என்று கேட்க நாதியில்லை. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் குஷன் நாற்காலியில் புட்டத்தை அழுந்தப் பதிந்தபடி அமர்ந்து உழவனுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 
பாவம்! உழவன் பிழைக்கட்டும். அவனது குரலை உரக்கப் பேசுகிறவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் அவனது காலில் விழுந்து வணங்கலாம்.
நூறு ஏக்கர் நிலம் கொண்ட ஒருவன் அரை நிர்வாணக் கோலத்தில் எலியைக் கடித்துக் கொண்டு உழவனுக்காக குரல் எழுப்புகிறான் என்றால் அவனை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் போற்றலாம். நசுக்கப்பட்ட விவசாயியின் குரலை டெல்லியில் எழுப்பும் அய்யாகண்ணுவையும் அவரது குழுவினரையும் மனப்பூர்வமாக வணங்குகிறேன். அவர்களால்தான் உழவன் கவனிக்கப்படுவான் என்றால் அவர்கள் இன்னமும் போராடட்டும். அதற்கான உடல் வலுவையும் மனத்தெம்பையும் இறைவன் அருளட்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக