புதன், 19 ஏப்ரல், 2017

அமைச்சர் ஜெயக்குமார் : தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது:

அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம்தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அனைவருமே கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
ஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள், தமிழக மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. எனவே, தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு ஆட்சி நடத்துவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும்'' என்றார்.
முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்றார்.
'சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக