சனி, 15 ஏப்ரல், 2017

தமிழகத்தில் அம்பேத்கார் திரைப்படம் இருட்டடிப்பு செய்யப்பட்டது... ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சாதி வியாதி


அம்பேத்கர் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடிவிட்டோம். வாழ்த்துகள் தெரிவிப்பது, ஹேஷ்டெக் கிரியேட் செய்து பரப்புவது, டிபி மாற்றுவது என நம்மால் முடிந்த சமூகக் கடமையை நிறைவேற்றிவிட்டு நம்மை தொலைக்காட்சிக்கு ஒப்புக்கொடுத்துவிட்டோம். அதில் ஒளிபரப்பப்பட்ட 'கொம்பன்', 'குட்டிப்புலி' படங்களை ரசித்து, கைதட்டி, ஆரவாரித்து, நகைச்சுவைக்கு சிரித்து நம் ஆதரவை தெரிவித்துவிட்டோம்.
இதுதான் நாமா? இல்லை நம் மனநிலையே இப்படித்தான் இருக்கிறதா?
'தேவர்மகன்', 'நாட்டாமை', 'எஜமான்', 'சின்ன கவுண்டர்' படங்களை ரசித்த நம்மால் ஏன் 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' போன்ற படங்களை முழுமையான கொண்டாட்ட அனுபவத்துடன் அணுக முடியவில்லை. 'மாவீரன் கிட்டு' படத்தை ஏன் புறக்கணிக்கிறோம்?
தலித் சினிமா என்று நம்மால் ஒரு படத்தை உரக்கச் சொல்லி வெளியிட முடிகிறதா? 'அம்பேத்கர்' படம் ஆங்கிலத்தில் 2000-ல் வெளியானது. ஆனால், தமிழில் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிவந்தது. அதுவும் வழக்கு போட்டு முடக்கப் பார்த்த நிலையில் வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், எடிட்டர் பி.லெனின், எழுத்தாளர் வே.மதிமாறன் போன்றவர்களின் அரும்பெரும் முயற்சியால் 'அம்பேத்கர்' படம் தமிழில் வெளியிட சாத்தியமானது.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் தயாரிக்கப்பட்டு ஜப்பார் படேல் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான அம்பேத்கர் படத்தையும் சாதி சார்ந்த தலைவரின் படமாகத்தான் பார்க்கப்பட்டது. தலித் அல்லாதவர்களும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் போராடிய அம்பேத்கரை கடைசி வரை சாதி சார் குறியீடு கொண்ட தலைவராகவே அடைத்து வைத்திருப்பதுதான் சமூக முரண்.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. 2006-ல் திமுக அரசு மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போது 'காமராஜ்' படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதும், மாணவர்களுக்கு இலவசமாய் திரையிட வழி செய்தது. அதற்குப் பிறகு சமுத்திரக்கனி கவுரவத் தோற்றத்தில் நடிக்க சில காட்சிகள் இணைக்கப்பட்டு 'காமராஜ்' டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், இன்றைக்கு 'அம்பேத்கர்' படம் மறு வெளியீடு சாத்தியமா? ஏனென்றால் தலித் சினிமா மட்டுமல்ல, சினிமா இயக்குநர்கள், நடிகர்களில் கூட சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது என்பதையும் இத்துடன் சேர்த்து புரிந்துகொள்ளப்படுவது அவசியமாகிறது.
இயக்குநர் சுசீந்திரன் சினிமாவில் சாதி பார்க்கிறார்கள் என வேதனையுடன் கருத்து கூறியிருந்ததை மறக்க முடியாது.
பல தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர்- இயக்குநரின் சாதியைப் பார்த்தே படங்களை கமிட் செய்கின்றன. இந்த நடிகர் தலித் என்றால் படத்துக்கு தலித் அடையாளம் வந்துவிடும் என்று அதை ஒதுக்கிவிடுகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் கூகுள், சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட முடுவுகளில் எந்த நடிகர்/ இயக்குநர் எந்த சாதி என்று பட்டியலிடப்பட்டு அதிகம் பேர் பார்த்தும் படித்தும் இருப்பதை அறிய முடிகிறது.
இந்நிலையில் அம்பேத்கர் குறித்த மறுவாசிப்பும், 'அம்பேத்கர்' படம் குறித்த மறுவெளியீடும் அவசியமானதாக மாறிவருவது காலத்தின் கட்டாயம். tamihthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக