செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கொடைநாடு எஸ்டேட்டில் மூன்று சூட்கேஸ் ஆவணங்கள் களவு ... ஜெயா சசி அறைகள் உடைக்கப்பட்டு உள்ளது

நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த 3 சூட்கேஸ் ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இருவரின் அறைகள் மற்றும் அதிலிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்டுள்ள சூட்கேஸ்கள் காலியாக இருந்ததால் அதிலிருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளது.
 முகமூடி அணிந்து காவலாளி ஓம்பகத்தூரை கொன்றவர்கள் ஆவணங்களை அள்ளிச்  சென்றுள்ளனர். முகமூடி மனிதர்களால் தாக்கப்பட்ட மற்றொரு  காவலாளி  கிரிஷ்ணபகத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா
 ஊட்டி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேடில் உள்ள பங்களாவின் காவலாளி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல், ஜெயலலிதாவின் அறை வரை சென்றுள்ளது.
அவர்கள் ஏதேனும் ஆவணங்களை எடுத்து சென்றார்களா என போலீசார் அறிவிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு சொந்தமாக 900 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட், அதில் 3 தேயிலை தொழிற்சாலை மற்றும் இரண்டு சொகுசு பங்களாக்கள் உள்ளன. இதில் புதிதாக கட்டப்பட்ட பங்களா 99 அறைகளை கொண்டது. இந்த பங்களாக்களை வெளியில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்த மதில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த எஸ்டேட்டை சுற்றிலும் 13 கேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டிற்குள் யாரும் நுழையாதபடி 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை, கோடநாடு எஸ்டேட்டில் கருப்பு பூனைப்படை போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, 8, 9 மற்றும் 10 ஆகிய கேட்கள் புதிய பங்களாவிற்கு செல்லும் வழி என்பதால், எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும். இந்த மூன்று கேட்களில் ஏதாவது ஒன்றின் வழியாகத்தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் சென்று வருவார்கள். ஜெயலலிதா இறந்த பின், இங்கு
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாபஸ் பெறப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எஸ்டேட்டிற்கு உட்பட்ட அனைத்து கேட்டுக்களிலும் நேபாள கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10வது கேட்டில் ஓம்பகதூர்(50), கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூர் மற்றும் கிருஷ்ணன் பகதூர் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் ஓம்பகதூர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். அவரை துடிக்க துடிக்க கொன்ற கும்பல்  உடலை அருகில் இருந்த மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். கிருஷ்ணன்பகதூர் படுகாயங்களுடன் மயங்கி விழுந்ததால், அவர் இறந்திருக்கலாம் என நினைத்து அப்படியே விட்டுவிட்டனர்.

பின்னர் பங்களாவை நோக்கி சென்று, ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். ஜெயலலிதா தங்கும் அறை உட்பட சில அறைகளை உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, படுகாயங்களுடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூர், அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலாளிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு திரளவே கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.
தகவலறிந்து நேற்று அதிகாலை போலீசார் வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நீலகிரி எஸ்பி., முரளிரம்பா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கரும் வந்து பார்வையிட்டார். காயமடைந்த கிருஷ்ண பகதூரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 7 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நுழைந்துள்ளனர். இவர்கள் காவலாளிகள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்துள்ளனர். பின்னர் அவர்களை கண் மூடித்தனமாக அரிவாளால் வெட்டியதாகவும், அதில் இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில் கிருஷ்ண பகதுார் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தார். காயமடைந்த கிருஷ்ண பகதூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த கோடநாடு பங்களாவில், விலை உயர்ந்த வைரம், தங்க நகைகள் மற்றும் பணம் இருக்கும். அதனை கொள்ளையடித்து செல்லலாம் என அந்த கும்பல் உள்ளே நுழைந்ததா? அல்லது ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ஆவணங்களை எடுக்க உள்ளே நுழைந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  கொலை நடந்த இடத்திற்கு ேமாப்பநாய் பென்னி கொண்டு வரப்பட்டது. அது கோடநாடு காட்சிமுனை அருகேயுள்ள காந்திநகர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. டிஐஜி ஆய்வு: கொலை நடந்த கோடநாடு எஸ்டேட்டில் நேற்று முன்தினம் இரவு முதல், ஆயுதம் ஏந்திய 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மேற்குமண்டல டிஐஜி., தீபக் தாமோதர் கொலை நடந்த கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணன் பகதூரை மருத்துவமனையில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். எஸ்டேட் நுழைவாயிலில் சிசிடிவி கேமரா இல்லாததால், ெகாள்ளை கும்பலை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளை நாடகமா?

கிருஷ்ண பகதூரின் வலது கையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கியதாகவும், அதில் ஓம் பகதூர் மட்டும் உயிரிழந்ததாகவும் கிருஷ்ண பகதூர் கூறியுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலாளி கிருஷ்ணன் பகதூரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலின் போது, ஒருவருக்கொருவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதால், அதனை மறைக்க கொள்ளை முயற்சி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்துடன் அலைந்த போலீசார்

படுகொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூர் உடலை பிரதே பரிசோதனை செய்ய போலீசார் நேற்று கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை மருத்துவர் இல்லை என தெரிந்தவுடன், குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை வாங்க மறுத்தனர். ‘எங்களது எல்லைக்குள் கொலை சம்பவம் நடக்காததால், நாங்கள் பிரேத பரிசோதனை செய்யமாட்டோம்’ என தெரிவித்தனர். இதனால் மீண்டும் பிற்பகலில் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடல்  கொண்டு செல்லப்பட்டது. இப்படி ஓம்பகதூரின் உடலை கோத்தகிரி போலீசார் குன்னூர், கோத்தகிரி என ஆம்புலன்சில் வைத்து அலைந்து திரிந்தனர். பின்னர் ஒருவழியாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக