சனி, 15 ஏப்ரல், 2017

அமெரிக்கா குண்டுவீச்சு : 94 தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டார்களா?

அமெரிக்கா குண்டுவீச்சு : 94 தீவிரவாதிகள் பலி!ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கும் பகுதியின்மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 94 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் அரசுப் படையினர் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் உள்ள மோமண்ட் டாரா என்ற பகுதியில் உள்ள குகைகள்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.
இந்தக் குகைகளில் இருந்தபடியே ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படையினர் மற்றும் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, மோமண்ட் டாரா குகை பகுதியில் ‘ஜிபியு - 43பி’ என்ற 11 ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டை அமெரிக்க விமானப்படை வியாழக்கிழமை (ஏப்ரல், 13) அன்று வீசியது.
அமெரிக்கா வீசிய குண்டு அனைத்துவகையான வெடிகுண்டுகளின் அம்மா (மதர் ஆப் ஆல் பாம்) எனக் கூறப்படுகிறது. இது அணுகுண்டு அல்லாத, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பெரிய வெடிகுண்டாகும். இந்த குண்டுவீச்சில் பலியானோர்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அச்சின் மாவட்ட ஆளுநர் இஸ்மாயில் ஷின்வாரி கூறுகையில், ‘இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 94 தீவிரவாதிகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இதில் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி கூறுகையில், ‘அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறேன். இந்த ஆப்ரேஷன் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படை மற்றும் அமெரிக்கப் படையினரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்’ என தெரிவித்துள்ளார்.
இது, அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைக்கு ஆதாரமாகவுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக