செவ்வாய், 18 ஏப்ரல், 2017

தேர்தல் ஆணையத்தை வளைத்து இரட்டை இலை பெற 50 கோடி ரகசிய பேரம்

* 1.30 கோடியுடன் புரோக்கர் சிக்கினார்
* டெல்லி தனிப்படை சென்னை வந்தது
* போலீஸ் அதிகாரி பரபரப்பு பேட்டி
* டிடிவி தினகரன் கைதாவாரா?

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி பேரம் பேசி, முன்பணமாக 1.30 கோடி வாங்கி ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த  புரோக்கரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனையும் வழக்கில் குற்றவாளியாக  போலீசார் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று டெல்லி போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். இது தமிழக அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியையும், ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற முயன்றதாக குற்றம்சாட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.
இதனால் அதிமுக உடைந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக செயல்பட்டு வருகிறது.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். இதனால் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து  நீக்கப்பட்ட டிடிவி.தினகரனை துணை பொதுச் செயலாளராக  நியமித்து விட்டு சிறை சென்றார் சசிகலா.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி, சசிகலா குடும்ப பிடியில் இருக்கும் கட்சியை மீட்டெடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக,  சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்பி  மைத்ரேயன் புகார் கொடுத்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல்  ஆணையத்தில் மனு அளித்தனர். பதிலுக்கு சசிகலா அணியினர்  இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இந்நிலையில், இரண்டு அணியினரும் கடந்த மார்ச் 22ம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் விளக்கம் அளித்தனர். அவர்களிடம் தேர்தல்  ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, இரு தரப்பினரும் ஏராளமான ஆவணங்கள் அளித்துள்ளதால் முடிவு எடுக்க நேரம் தேவைப்படுகிறது  எனக்கூறி இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதை தொடர்ந்து, சசிகலா அணிக்கு  அதிமுக அம்மா என்றும், ஓபிஎஸ் அணிக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா என்றும் பெயர் வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணிக்கு தொப்பி சின்னமும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிக்கு மின்கம்பம் சின்னமும்  ஒதுக்கப்பட்டது.

இந்த சூழலில், அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் நிறுத்தப்பட்ட டிடிவி.தினகரன் தரப்பு மூலம் வாக்காளர்களுக்கு  கோடிக் கணக்கில் பணம் வாரி இறைக்கப்படுவதாக ஓபிஎஸ் அணி மற்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதை கண்காணித்து வந்த  வருமானவரித்துறை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிமற்றும் அமைச்சர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் அதிமுகவின் இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று இரு  அணிகளிடமும் தேர்தல் ஆணையம் இறுதி ஆய்வு நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஓபிஎஸ் அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே,  தங்களுக்கு கட்சியில் லட்சக்கணக்கானோர் ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நேற்றும் சில  ஆவணங்களுடன் அறிக்கை அளித்தனர். இந்த நிலையில் சசிகலா அணியினரும் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் மற்றும்  நிர்வாகிகளிடம் ஆதரவை திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். சசிகலா அணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் 8 வார காலம் கூடுதல்  அவகாசம் கேட்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக தினகரன் தரப்பினருடன் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  பேரம் நடப்பதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று ஓட்டலில் சோதனையிட்டனர். சோதனையில் ஓட்டலில் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.1.30 கோடி பணம் இருந்தது  கைப்பற்றப்பட்டது. பிடிபட்டவர் இடைத்தரகர் என்றும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர், அளித்த வாக்குமூலத்தில். ‘‘இரட்டை இலை சின்னத்தை பெற்று தர டிடிவி.தினகரன் தரப்பினர் ரூ.50 கோடி வரை தர பேரம் பேசினார். அதில்  முதல்கட்டசமாக ரூ.1.30 கோடி கொடுத்தனர். முன்னாள் உள்துறைச் செயலாளரும் தற்போது டெல்லியில் முக்கிய பதவியில் உள்ள ஒரு அதிகாரிதான்  என்னிடம் பேசினார். எனக்கு தேர்தல் ஆணையத்தில் யாரையும் தெரியாது. ஆனால் பொய் சொல்லித்தான் பணத்தை ஏமாற்றி வாங்கினேன்” என்று  தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை டெல்லி போலீஸ் அதிகாரி மதுர்வர்மாவும் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இரட்டை இலையை  பெற்றுத்தர டிடிவி தினகரன் ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.சுகேஷ் சந்திரசேகரின் வாக்குமூலத்தால் அதிர்ந்து போன டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி.தினகரனை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக  துணை கமிஷனர் மாத்தூர் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இதற்கிடையில், சசிகலாவைச் சந்திக்க பெங்களூர் சென்ற டிடிவி  தினகரன் நேற்று இரவு வரை சென்னை திரும்பவில்லை. அவர் சென்னை திரும்பினால், அவரிடம் விசாரணை நடத்தவும், பின்னர் மேல் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும்  அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதில், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

8 நாள் போலீஸ் காவல்
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் நேற்று மாலை டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்திரி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாள் டெல்லி  குற்றப்பிரிவு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். முன்னதாக சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில்  போலீசார் பல்வேறு குழப்பங்களை செய்தனர். இறுதியில் திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு மாலை 4.30 மணிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில்  நீதிபதி இல்லாததால் அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தினர்dinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக