வியாழன், 13 ஏப்ரல், 2017

ராதிகா சரத்குமார் 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு .. திரும்ப செலுத்த தயார் .

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் வரி ஏய்ப்பு செய்தேன்: ராதிகா வாக்குமூலம்?நடிகர் சரத்குமார் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த அடுத்த நாள், ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால், ஏப்ரல் 10ஆம் தேதி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். பின்னர் ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் சரத்குமாரின் இல்லத்தில் சோதனை நடைபெற்றதுடன், ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி ராதிகா, சரத்குமார் இருவரும் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
அதன்படி, ஏப்ரல் 12ஆம் தேதி மதியம் நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரிடம் கிடுக்குப்பிடியான பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். சரத்குமாரிடம், ‘தினகரனை ஆதரிப்பதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?' என்கிற ரீதியிலான கேள்விகளை அடுக்கியுள்ளனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை முடிவில், ராடன் மீடியா நிறுவனம் 4.97 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததை ராதிகா ஒப்புகொண்டதாகவும் வரியைத் திரும்ப செலுத்தி விடுவதாகவும் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் தெரிவித்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாம் தினமும் தொலைக்காட்சி பார்க்கும்போது கடன் பற்றிய ஒரு விளம்பரம் நம்மை கடந்துபோவதைக் கண்டிருப்போம். நிதி நிறுவனங்கள் சார்பாக நடிகை ராதிகா அந்த விளம்பரத்தில் தோன்றி, ‘நிதி நிறுவனங்களிடம் நீங்கள் வாங்கிய கடனை சீக்கிரம் வட்டியுடன் செலுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்கும் நன்மை, நிறுவனங்களுக்கும் நன்மை’ என்று வேண்டுகோள் வைப்பார். அப்படிப்பட்ட ராதிகாவே அரசாங்கத்திடம் ரூபாய் 4.97 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளார். இனி ராதிகா விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடி காட்சிகள் விரைவில் நடக்கவுள்ளன.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக