ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

டெல்லியில் 23 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்!

சாகும் வரை உண்ணாவிரதம்: டெல்லியில் 23 விவசாயிகள்!
மின்னம்பலம் :பல நூதன வழிகளில் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். வறட்சி நிவாரணம், விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்தும், இதுவரை இவர்களது பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனால் இவர்கள் தங்களது போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரபடுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் தங்களது போராட்டத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் எலிக்கறி, பாம்புக்கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பயனில்லை.
வறட்சி நிவாரணம் குறைவாக வழங்கியதைச் சுட்டிக்காட்டும் விதமாக விவசாயிகள் தங்களது பாதி மீசையை எடுத்தும், அரை மொட்டை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கை கால்களைக் கட்டிக்கொண்டு சாலையில் உருண்டு புரண்டும், பிளேடால் கீறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் இன்று 27ஆவது நாளை எட்டியுள்ளது. தற்போது பாதி மீசை, பாதி மொட்டை அடித்தவர்கள் முழு மொட்டை அடித்து கொண்டனர். பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக டெல்லி போலீஸார் வாக்குறுதி அளித்தனர். இதனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற வழி கிடைத்ததாக நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இதனால் 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போராட்டத்தைத் தொடங்கினர்.
விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்படுகிறது. இதனால் கடந்த சில நாள்களாக விவசாயிகள் சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட நான்கு பேர் நேற்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த முருகன் (56), மேட்டுப்பாளையம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த அகிலன் (19) ஆகிய இருவரும் மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பினர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் (55), துவரங்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி (65) ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பெருமாள், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போராட்டத்தை வழிநடத்தி செல்லும் அய்யாகண்ணு கூறுகையில், “பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறிய போலீஸாரும் எங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நாளை திங்கட்கிழமை பிரதமரை நாங்களாகவே சந்திக்க புறப்படுவோம். அப்போதும் அவர் எங்களைச் சந்திக்க மறுத்தால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக