சனி, 15 ஏப்ரல், 2017

கொழும்பு ... குப்பைமேடு தீ விபத்து 11 பேர் மரணம் .. 4 குழந்தைகள் உட்பட ..


இலங்கையின் கொழும்பு புறநகர்ப் பகுதியில் மிகப்பெரிய குப்பைமேடு தீப்பிடித்து சரிந்ததில், 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியான கொலன்னாவ மீட்டொத்தமுல்லையில் மிகப்பெரிய குப்பைமேடு உள்ளது. இங்கு தினமும் 800 டன் அளவுக்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மொத்தம் 23 மில்லியன் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக பாராளுமன்றம் எச்சரித்தது.
இந்நிலையில், இந்த குப்பைமேட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குப்பைமேடு சரியத் தொடங்கியது. அருகில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடிசைப்பகுதியில் குப்பை சரிந்து தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ, அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த விபத்தில் 6 பேர் நேற்று உடல் கருகி உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தினால் சுமார் 100 குடிசைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 180 மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து குப்பைமேட்டை வேறு இடத்திற்கு மாற்றும்படி வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக