வியாழன், 30 மார்ச், 2017

ரஜினி இலங்கை வருகை .. லைக்காவை பகைக்காமல் அடித்தட்டு மக்களை இழிவு படுத்தும் போலி தமிழின போராளிஸ் ..

த. கலையரசன்
யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌:
ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் “நியாய‌ம‌ற்ற‌து” என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?
இத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.
ர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.
லைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வ‌ர‌வ் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் “வ‌ள்ள‌ல்க‌ளும்” செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

ஆனால் இங்கே ப‌ல‌ர் முக்கிய‌மான‌தொரு உண்மையை ம‌ற‌ந்து விடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வு கால‌மும், வீட‌ற்ற‌ ஏழைக‌ள் குர‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். கூட்ட‌மைப்புக்கும், சைக்கிள் க‌ட்சிக்கும் இடையிலான‌ குடுமிப் பிடி ச‌ண்டையில் அந்த‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் பேச‌ப் ப‌டுவ‌தில்லை.
ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தை லைக்கா பின் நின்று ந‌ட‌த்தி இருந்தாலும், அந்த‌ ம‌க்க‌ளை கூட்டி வ‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னுக்கு நிறுத்திய‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌ முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌மாக‌த் தான் தெரியும். அது ஸ்பொன்ச‌ர் ப‌ண்ணிய‌ லைக்காவின் உத்த‌ர‌வு. ஆனால், போராட்ட‌த்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற‌ ப‌ய‌மும் அந்த‌ அப்பாவி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்திருக்கும்.
இந்த‌ நாட‌க‌த்தை பின்னுக்கு நின்று இய‌க்கிய‌ லைக்காவை குற்ற‌ம் சாட்டாமல், முன்னால் நின்ற‌ அப்பாவி ம‌க்களை தூற்றுவ‌து ஏன்? அவ‌ர்க‌ளை “முட்டாள்க‌ள், பிய‌ருக்கு விலை போன‌வ‌ர்க‌ள்” என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன்? எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து ஏன்? இது தான் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின், குட்டி பூர்ஷுவா குணாம்ச‌ம். அவ‌ர்க‌ள் லைக்காவை விம‌ர்சிக்க‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் முத‌லாளிக‌ளை ப‌கைக்க‌க் கூடாது என்பார்க‌ள். அதே நேர‌ம், அடித்த‌ட்டு ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துவார்க‌ள். அதை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஆளில்லை என்ற‌ தைரிய‌ம்.
த. கலையரன், எழுத்தாளர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக