புதன், 1 மார்ச், 2017

நெடுவாசல் போராட்டம் நிறுத்தப்படுமா? போராட்டகுழு முதல்வர் சந்திப்பு!



ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுவாசலில் இன்று 14 வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், இளைஞர்களும் நெடுவாசலுக்கு வருகை புரிகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்ட எழிச்சியில் உதித்த "என் தேசம் என் உரிமை கட்சி" ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவு ஒரு குழுவாகப் புறப்பட்டு நெடுவாசல் வந்தடைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நுழைவுப் பகுதியிலே போலீஸார் முகாமிட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் வரும் அத்தனை வாகனங்களையும் ஆய்வு செய்து, அங்கே வருகை தருவோரின் நோக்கம், வாகனத்தின் எண், வருவோரின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் நெடுவாசல் போரட்டக் குழு சார்பாக 11 பேர் கொண்ட குழு இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் , காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், “எங்களிடம் முதல்வர் பழனிச்சாமி, தானும் ஒரு விவசாயிதான் விவசாயிகளைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என்று கூறினார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு நிலையில் தான் உள்ளது. கண்டிப்பாக இந்தத் திட்டத்துக்கு எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுக்காது. திட்டத்தை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் முதல்வர். ஆனால் போராட்டத்தை கைவிடுவது எங்கள் கையில் இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நடத்தும் போராட்டம் இது. முதல்வர் எங்களிடம் கூறியதை நெடுவாசல் சென்று நெடுவாசல் போராட்டக் களத்தில் உள்ள மக்களிடம் எடுத்துரைப்போம். அவர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகு போராட்டத்தை கைவிடுவதா? இல்லை தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறினர்.
இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழு சார்பில் முதல்வரிடம் நடந்த பேச்சு வார்த்தை குறித்து போராட்ட களத்தில் உள்ள மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நாங்கள் வாய் வார்த்தைகளை நம்ப முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தப்பட்டது என்று எழுத்துப் பூர்வமான, அரசுப் பூர்மான அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி இந்த திட்டத்தை நிறுத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதே போல், நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதியை வேளாண்மை பாதுகாப்பு மண்டலாமாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக