வெள்ளி, 31 மார்ச், 2017

சுனைனா சிங் .... நாளந்தா பல்கலை கழக துணைவேந்தர் . பணம், பார்பனீயம், வெள்ளைத்தோல், ஊழல் போன்ற தகுதிகள் ...

பண்டைய இந்தியாவில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மட்டுமல்லாமல், சீனர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள் என்று பல நாடுகளின் அறிஞர்கள் வந்து தத்துவப் பயிற்சிப் பெற்றுச் சென்றுள்ளனர். அன்றைய இந்தியாவின் தத்துவத்தை, கல்வியின் மகத்துவத்தை நாளந்தா உலகறியச் செய்தது என்றால் அது மிகையல்ல. கால மாற்றத்தில் படையெடுப்புகளால் நாளந்தா சிதைந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சசிதரூர் போன்றவர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். நாளந்தா என்றால் ஞாலம் + தா = நாளந்தா என்றானது என்று சசிதரூர் குறிப்பிடுகிறார். நாளந்தா என்பது ஒரு தமிழ் பெயர்தான். இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் தமிழ்ப்பெயரில் அமைந்தது என்பதில் தமிழர்கள் பெருமை கொள்ளலாம்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டில், முன்மொழியப்பட்டு, இந்தியாவின் கீழை நாடுகளின் கொள்கையின்படி, நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்குவதற்கான முன்முயற்சி எடுக்கப்பட்டது. பின்னர், 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நாளந்தா பல்கலைக்கழகத்துக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு 2014ஆம் ஆண்டில் இருந்து முறையாகத் தொடங்கப்பட்டது. தற்போது, நாளந்தா பல்கலைக்கழகம் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் ஒரு கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ளது.
இத்தகைய வரலாற்றுப் புகழ்மிக்க பல்கலைக்கழகத்துக்கு, ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சுனைனா சிங்கை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளந்தாவின் துணைவேந்தராக நியமித்துள்ளார் .
சர்ச்சைகளுக்குச் சொந்தகாரரான சுனைனா சிங் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்களிடையேயும் அரசியல் களத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சுனைனா?
சுனைனா சிங் ஆங்கிலத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பின்நவீனத்துவம், புலம்பெயர் இலக்கியம், தெற்காசிய படைப்புகள், பெண் எழுத்துகளில் பன்முகப் பார்வை ஆகிய தளங்களில் ஆய்வுசெய்து முது முனைவர் பட்டம் பெற்றவர். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைவராக இருந்தவர். பின்னர், 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை சாஸ்திரி இந்தோ - கனடியன் நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றினார். பின்னர், ஐதராபாத் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார்.
சுனைனா சிங் ஐதராபாத்தில் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, தனது அதிகாரத்தின் மூலம் கூனல் துக்கல் என்ற தலித் ஆய்வு மாணவர் மீது நடவடிக்கை எடுத்தார். நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அந்த மாணவர் அப்படி என்ன பெரிய தவறு செய்தார்?
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் சாதிய பாகுபாடுடன் செயல்பட்டதால், பாதிக்கப்பட்ட ரோஹித் வெமுலா என்ற தலித் ஆய்வு மாணவர் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கூனல் துக்கல் கலந்துகொண்டார். இதற்காக கூனல் துக்கல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கட்டம் கட்டப்பட்டார். மேலும், டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து கூனல் துக்கல் நீக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஏப்ரல் 2016இல் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், சுனைனா சிங் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. கூனல் துக்கலுக்கு ஆதரவாக போஸ்டர்களும், ஓவியங்களும் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் பல்கலைக்கழகத்துக்குத் தொந்தரவை அளித்தது. அப்போது, எஸ்.சி., எஸ்.டி. பேராசிரியர்கள் சங்கம் மற்றும் சமூகநீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் கூனல் துக்கலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் வகையில், தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று கூறியது. இதையடுத்து, மத்தியப் பல்கலைக்கழகக் கொடிக் கம்பங்களிலேயே, ஐதராபாத் ஆங்கிலம் மற்றும் அயல்மொழி பல்கலைக்கழகத்தில் மிக அதிக உயர அளவில் 108 அடி உயரம் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு, 2014ஆம் ஆண்டு துணைவேந்தர் சுனைனா சிங் பல்கலைக்கழகத்தின் நிதியைத் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கும் உள்நாட்டுப் பயணத்துக்கும் தவறாகப் பயன்படுத்தினார் என்று பொது தணிக்கையாளர் கண்டுபிடித்து குற்றம்சாட்டினார். இது அப்போது செய்தித்தாள்களில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படி சர்ச்சைகளில் வலம் வந்தவர்தான் சுனைனா சிங்.
அரசியல் தலையீடுகள் காரணமாக நாளந்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேதை அமர்தியா சென் வழி நடத்திய வழிகாட்டுக் குழு கலைக்கப்பட்டது. பின்னர், நாளந்தாவின் துணைவேந்தர் கோப சபர்வால் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, 2016 ஜனவரியில், நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரைத் தேர்வு செய்ய ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட டெல்லி ஐஐடி வாரியத் தலைவர் பட்கர், ஐசிசிஆர் தலைவர் லோகேஷ் சந்திரா, மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந் சர்மா, கிழக்கு வெளி விவகாரங்கள் துறை செயலர் பிரீத்தி சரண், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்.கே.சிங் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு.
இந்த துணைவேந்தர் தேர்வுக் குழுவிடம் துணைவேந்தர் பதவிக்கு 135 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுனைனா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றால், பின்னர் யார் தான் கேள்வியெழுப்ப மாட்டார்கள்?
மத்தியப் பல்கலைக்கழகமே இப்படி இருக்கிறது என்றால், மாநில பல்கலைக்கழகங்களின் நிலையோ இன்னும் மோசம். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய இந்த மூன்று பல்கலைக்கழகங்களிலும் இன்னும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
“பொதுவாக துணைவேந்தர் பதவியை ரூ.8 முதல் 12 கோடி வரை கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி துணைவேந்தர் பதவியை வாங்கியவர் பதவிக்காலத்துக்குள்ளாகவே அதை இரண்டு மடங்காக எடுத்துவிடுவார்கள்” என்று கூறுகிறார் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர். “தினசரி அலுவலக நடைமுறையில் மட்டுமே தினமும் ரூ.1 லட்சம் தேற்றிவிடுவார்கள்” என்று கூறி நம்மை அதிரச் செய்தார் அவர். இப்படி பணம் காய்க்கும் பதவியைப் பெற பணம் இருந்தால் மட்டும் போதாது, சாதி செல்வாக்கும் வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக இருப்பவர்கள் ஏழு பேர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் இது இயல்பாக நடந்தது இல்லை என்று விளங்கிக்கொள்ள முடிகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்த 70 ஆண்டு காலங்களில், தலித் சமூகத்திலிருந்து ஆறு பேர் மட்டுமே தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக இருந்துள்ளார்கள். இப்படி துணைவேந்தரைத் தேர்வு செய்வதில் அரசியல்வாதிகளும் பணபலமும் சாதி பலமும் சேர்ந்து விளையாடுவது பொதுச் சமூகத்தின் பார்வைக்கே வருவதில்லை.
பொதுவாக ஒரு துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க என்ன நடைமுறை என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்பிரமணியன் அவர்களிடம் பேசியபோது, “ஒரு துணைவேந்தர் பதவிக்குத் தகுதி பெற வேண்டுமானால், அவர் கட்டாயம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். பேராசிரியர் பதவி என்பது பல்கலைக்கழகங்களில் மட்டுமே உள்ளது. அரசு கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் பதவி மட்டும்தான். அங்கு கல்லூரி முதல்வர் பதவி மட்டுமே பேராசிரியர் பதவிக்கு நிகரான பதவி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமிக்க வேண்டும். ஆனால், இதில் ஆளுநர் அரசியல்வயப்பட்டவராக இருந்தாலும், அவர் நேர்மையாக அரசியல் சார்பு இல்லாமல், யுஜிசி விதிமுறைகளின்படி துணைவேந்தரை நியமிக்க வேண்டும். ஆனால், அரசியல் தலையீடோடுதான் எல்லா துணைவேந்தர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இதனை மாற்ற வேண்டுமானல், யுஜிசி விதிப்படி துணைவேந்தரைத் தேர்ந்தெடுத்தாலே போதும். வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஆனால், நம் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள் என்ன செய்வது?” என்று முடித்தார்.
இப்படி சீரழிந்து கிடக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், இனிவரும் காலங்களிலாவது பணமும், ஆட்சியாளர்களின் குறுக்கீடும், சாதி அரசியலும் இல்லாமல் செயல்படுமா அரசு?
- ஏ.பாலாஜி  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக