புதன், 1 மார்ச், 2017

உதயகுமார் மோடி அரசு வெளி நாட்டினருக்கு கைக்கூலியாக செயல்படுகிறது! நெடுவாசல்...


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை இந்த போராட்டம் ஓயாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இன்று 14-வது நாளாக பொது மக்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் நிலையற்ற தன்மையாக உள்ளது. குழப்பங்கள் நிறைந்து நிச்சயத்தன்மையின்றி உள்ளது.. இதனால் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளனர். எனவே இது வி‌ஷயத்தில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டம் உணவு ஆதாரமாக உள்ளது. இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி போகும். மன்மோகன்சிங் அரசு என்றாலும், மோடி அரசு என்றாலும் வெளி நாட்டினருக்கு கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். அணு உலை , மீத்தேன் என எந்த திட்டமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறார்கள். ஆனால் அவற்றின் மூலம் மிகப் பெரிய பாதிப்புகள் உள்ளது. அரசியல்வாதிகள் சிலர் தங்கள் நன்மைக்காக, பொதுமக்கள் நன்மை, தீமை தெரியாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். இது ஒட்டுமொத்த மக்களை திசை திருப்பும் செயல்.
15 ஆண்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்போவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 23 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரது நிறுவனமும் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றும், அதில் 1000 கோடி தமிழகத்திற்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே 8 கோடி தமிழக மக்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் ஓயாது என்று அவர் கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக