வியாழன், 30 மார்ச், 2017

பாஜக ராஜாவின் கொடும்பாவி எரிப்பு .. சோனியாவை தரம் தாழ்ந்து பேசிய பாஜக...


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக பேசியதாக ஹெச். ராஜா உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர் காங்கிரஸார். சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். அவரது உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். பின்னர் விஜய் இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம். சோனியா காந்தியை ஹெச்.ராஜா தொடர்ந்து அவமதித்தால் அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் விக்டரி ஜெயக்குமார், ஹசன் ஆரூண் மற்றும் டி.எம்.தணிகாசலம், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகளிர் போராட்டம்
தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி தலைமையில் பெண்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் பா.ஜனதா தலைவர்களை கண்டிக்கிறோம். ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் ஹெச்.ராஜா உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணி, ராஜேந்திரன், மைதிலி தேவி, மாவட்ட தலைவர் வனிதா, சரளாதேவி, கவுரி கோபால், வக்கீல் சுதா, ரஷீதாபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தேரடியில், பகுதி தலைவர்கள் அரவிந்த் ஆறுமுகம், தேசிய மணி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஹெச்.ராஜா உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து எரித்தனர். இதில் மணலி பகுதி தலைவர் ரமேஷ், சன்னசேக்காடு பகுதி தலைவர் தீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநாவுக்கரசர் அறிக்கை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் ஹெச். ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் பத்திரிகையாளர்களையே தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தேவையில்லாமல் அன்னை சோனியா காந்தியை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்திருக்கிறார்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தமது உயிரையே தியாகம் செய்த இந்திராவின் அன்பு மருமகளான அன்னை சோனியாவின் தேசப்பற்று, விடுதலைக்காக துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, பயங்கரவாதத்திற்கு தமது கணவர் ராஜீவ்காந்தியை பலிகொடுத்தவர் சோனியா காந்தி. இத்தகைய அரும் பெரும் தியாகங்களை செய்த தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தியைப் பற்றி விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வில் எவருக்கும் அருகதையில்லை. லட்சோபலட்சம் தொண்டர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அன்னை சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச். ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச். ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களை ஹெச். ராஜா பேசுவது இது ஒன்றும் புதிய சம்பவமல்ல. ஏற்கனவே இதற்கு முன்பு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடியை தாக்கி பேசினால் வீடு திரும்பமாட்டார் என்று கூறியபோது, மதிமுகவினர் ஹெச். ராஜா உருவப்பொம்மைகளை தமிழகம் முழுவதும் எரித்தனர். அதன் பின்னர், முஸ்லிம் பெண்கள் அணிந்து வரும் பர்தா உடையில் தேர்வு எழுதுவதற்கான "பிட் "டுகளை மறைத்து வைத்து கொள்வதற்கு ஏதுவானது என்றபோதும் அவரது உருவப்பொம்மை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. அதையடுத்து, தந்தை பெரியார் குறித்தும், ஜல்லிக்கட்டு தொடர்பாகவும் அவர் கருத்து கூறியபோது தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி அவரது உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக பேசிய ஹெச். ராஜாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அவரது உருவப் பொம்மையை காங்கிரஸார் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக