வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

Marx Anthonisamy : எல்லாந்தான் படிச்சீங்க.. என்னபண்ணி கிழிச்சீங்க?

சொல்லுறதை சொல்லிப்புட்டேன்...
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நிறைய பேருக்குக் கோபம் வந்துள்ளது. அதிலும் கண்மூடித்தனமான விசுவாசிகளுக்கு ரொம்பவே கோபம் வந்துள்ளது. கட்சி வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என் அக்கறையைப் புரிந்து எதிர்வினை ஆற்றி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
பொதுவாக ஒரு அம்சத்தை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத்தியதர வர்க்கத்திடம் என்னால் காண முடிகிறது. சசிகலா கும்பலின் கொள்ளை, குடும்ப ஆதிக்கம் ஆகியவற்றின் மீது உண்மையான வெறுப்பும் கோபமும் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கெல்லாம் எதிராகப் போராட, குரல் எழுப்ப இவர்கள் யாரும் தயாராக இல்லை. அப்படியெல்லாம் செய்து மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கையும் இவர்களுக்கு இல்லை. கட்சிகளுக்கும் இல்லை.
ஒன்றை யோசித்துப் பாருங்கள். கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய தொடர் போராட்டம், சிறை நிரப்பும் போராட்டங்களைக் கட்சிகள் நடத்தியுள்ளனவா? நடந்த போராட்டங்கள் எல்லாம் அடையாளப் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், மாலை 5 மணிக்கு நிச்சயமாக விடுதலை செய்யப்படுவோம் என்பதான "சிறை நிறப்பும் போராட்டங்கள்". நான் எந்தக் கட்சியையும் குறிப்பாகச் சொல்லவில்லை.
எல்லாக் கட்சிகளையும்தான் சொல்கிறேன். இந்த நிலைக்குக் கட்சிகள்தான் காரணம் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் அதுதான் எதார்த்தம்.
இந்த நிலையைக் கண்டு ஆளும் வர்க்கம் இம்மியும் கவலைப்படவும் இல்லை.
* * *
இந்த நிலையின் இன்னொரு பக்கம்தான் இன்னும் கவலைக்குரிய ஒன்று. இப்படியான சூழலின் விளைவாக எந்த அநீதியையும் ஒழிக்க நம்மால் முடியாது என்கிற அவநம்பிக்கை, கையாலாகாத்தனம் ஒன்று சமூகத்தில் ஆழப் பதிந்து விட்டது. எனவே அநீதிகள் ஒழிய அவர்கள் 'காத்திருக்க' தயாராகி விட்டனர்.
மனம் விட்டுச் சொல்கிறேன். எங்களுக்கே சில அனுபவங்கள் உண்டு. போராட்டங்கள் நடத்த வேண்டிய பல சந்தர்ப்பங்களில் இயக்கங்கள் எங்களை அணுகி ஒரு உண்மை அறியும் குழு அமைத்து அறிக்கை வெளியிட முடியுமா எனக் கோரி உள்ளார்கள். ஒரு நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய பாக்கி. அவர்களை இயக்கும் அமைப்பினர் அப்படி எங்களை அறிக்கை அளிக்கக் கோரினர். இப்படி நிறையச் சொல்ல இயலும். நான் குறை சொல்லவில்லை. அதுதான் எதார்த்தம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது, PIL தொடர்வது...
இவை எல்லாம் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால் இவை மட்டுமே போதாது என்பதுதான். ஆனால் இப்படியான ஒரு கலாச்சாரம் இப்போது உருவாகியுள்ளது.
* * *
இவை கூடப் பரவாயில்லை. இதன் இன்னொரு போக்கின் மீதுதான் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
இப்போதைய சசிகலா கும்பல் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க போன்ற ஒரு அரசு தனது பிளவு அரசியலின் மூலம் தமிழகத்தில் காலூன்றுவதற்கான முயற்சி என அறிந்தும், ஊழலை ஒழிப்பதோ இல்லை அநீதியைக் களைவதோ அதன் நோக்கம் இல்லை எனப் புரிந்தும் அது இன்று ஊழல் ஒழிப்புக்காக நிற்பதுபோலக் காட்டி ஆட்சி கவிழ்ப்பையும், திராவிட இயக்க அழிப்பையும் மேற்கொள்ள முனைந்த போது அதை விமர்சனமில்லாமல் ஆதரித்தது என்பது நான் மேற்கூறிய கையாலாகாத்தனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.
இது அரசியலற்ற, ரொம்பவும் unethical ஆன ஒரு நிலை. கடந்த ஒரு வாரம் பலரையும், குறிப்பாக மத்தியதரவர்க்கத்தை இதுவே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், விவசாயப் போராட்டங்கள், புகழ் பெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்த காலத்தில் இந்த மனநிலை இல்லை.
ஆக சமூக அநீதிகளை எதிர்க்கும் பொறுப்பை அநீதியான நோக்கத்திற்காகச் செயல்படும் அரசதிகாரத்திடமே தந்துவிட்டு வேடிக்கை பார்ப்பதென்றால்....
என்ன நடந்தது இங்கே. அதிமுகவை ஒழிப்பதன் மூலம் இங்கே இந்துத்துவம் கால் பதிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லையா?
அறுதிப் பெரும்பான்மையைக் காட்டியும் அரசமைக்க அழைக்காமலும், காவல்துறை, அரை இராணுவப் படைகள் மூலமும் மிரட்டியும் என்னென்ன அநீதிகள் நடந்தன.
"எல்லாம் எங்களுக்கும் தெரியும் தோழர். பா.ஜ.க / இந்துத்துவ ஆபத்தை விட ஊழல் ரொம்ப மோசமில்லையா?" - என்கிற வாதங்களை சமூக ஊடகங்களில் நம்மவர்கள் கக்கவில்லையா?
இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் குந்தியிருப்பதுதான் கட்சிகளின் வேலையா?
அக்கறையோடு சுட்டிக்காட்டினால் "நீங்கள் செய்ய வேண்டியதுதானே.." என்றெல்லாம் வார்த்தையாடுவது கெட்டிக்காரத் தனமா?
பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரத்தின் பாடல் ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது.
"சொல்லுறதை சொல்லிப்புட்டேன்.
செய்யிறதைச் செஞ்சிடுங்க..
நல்லதுன்னா கேட்டிடுங்க..
கெட்டதுன்னா விட்டுடுங்க..
எல்லாந்தான் படிச்சீங்க..
என்னபண்ணி கிழிச்சீங்க?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக