வியாழன், 2 பிப்ரவரி, 2017

மதுரையில் நூற்றுக்கணக்கான செல்போன்,பர்ஸ்,ஏடிஎம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன! மதுரை உண்மையறியும் குழு அறிக்கை

madurai-thamukkamthetimestamil.com :சல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டும் என வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியர் முரளி மற்றும் பல்வேறு அமைப்புகளின் – அமைப்புகளைச் சாராத வழக்கறிஞர்கள் 18 பேர் அடங்கிய உண்மை அறியும் குழு கடந்த 24ஆம் தேதியன்று அலங்காநல்லூரிலும், 28ஆம் தேதி மதுரை நகரிலும் மக்களிடம் விசாரித்தது. பின்னர் அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியான கள ஆய்வு, காவல்துறை அதிகாரிகளின் பதில்கள், பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, 23.01.2017 அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மாநகரில் இரயில்மறியல் நடந்த தத்தனேரி – மேல அண்ணாத்தோப்பு – தாகூர் நகர் – செல்லூர் பகுதிகளில் நடந்த காவல்துறை தடியடி குறித்து கீழ்க்கண்ட உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்.
  1. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நூற்றுக்கணக்கானோரை கடுமையாக அடித்துள்ளனர். வீடுகளில் இருந்தவர்கள், போராட்டத்தில் இல்லாதவர்களையும் தாக்கி கைதுசெய்துள்ளனர். மக்கள் திருப்பித் தாக்கவில்லை.
  2. அலங்காநல்லூர் வன்முறையில் மக்களை அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆவார். இவருக்கு உத்தரவு பிறப்பித்தவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி.
3.மதுரை தத்தனேரி இரயில்பாலம் தடியடியில் காவல்துறைதான் முதலில் கல் எறிந்து பிரச்னையைத் துவக்கியுள்ளது. பின்பு வேடிக்கை பார்த்தவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. பின்னர் மக்களில் சிலரும் கல்லால் போலீசாரை எறிந்துள்ளனர். இதற்கு சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளே பொறுப்பு.
4.மதுரை அலங்காநல்லூர் மற்றும் தத்தனேரி இரயில்பாலத்தின் கீழ் இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் காவல்துறையால், எவ்விதத் தேவையும் இன்றி நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கான நேரடிப் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. இனி, போராட்டங்களில் மக்கள் பங்கேற்கக்கூடாது என்ற அடிப்படையில் பொருட்சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மீதான காவல்துறையின் உளவியல் தாக்குதல் ஆகும்.
5.மதுரை நகர் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற நபர்களின் போட்டோக்களை வைத்துக்கொண்டு மாணவர்களை-இளைஞர்களை-மக்களை காவல்துறை அச்சுறுத்துகிறது. சுமார் 100 பேரை கைதுசெய்து, கடுமையாக அடித்து சிறையில் அடைத்துள்ளது. இன்னும் பலரை காவல்நிலையம் கொண்டுவந்து பணம் வாங்கிக்கொண்டு வெளியில் அனுப்புகிறது. குறிப்பாக செல்லூர், கருப்பாயூரணி காவல் நிலையங்களில் பணவசூல் அதிகமாக நடக்கிறது. தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி, செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன் ஆகியோர் கைதானவர்களைத் தாக்குவதில் முதன்மையாக உள்ளனர்.
6.மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்கள் இன்றுவரை நீதிமன்றங்களில் ஒப்படைக்கப்படவில்லை.
7.மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி மற்றும் சென்னை, கோவையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்-இளைஞர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முடிவு தமிழககாவல்துறை தலைமையால் எடுக்கப்பட்டு, அதனை அமல்படுத்தும் விதமாக எல்லாக் காவலர்களும் “தீவிரவாதிகளுக்கு ஏன் இடம் கொடுக்கிறீர்கள்” என்றே கேட்டு மக்களை அடித்து அச்சுறுத்தியுள்ளனர். தனிப்பட்ட ஒரு சில காவலர்களின் செயலாக இது இல்லை.
மேற்கண்ட முடிவுகள் அடிப்படையிலான பரிந்துரைகள்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-மேல அண்ணாத்தோப்பு பகுதிகளில் நடந்த தடியடி மற்றும் வன்முறை குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள பணியில் உள்ள நீதிபதி மூலம் வெளிப்படையான பொது விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை முடிவில் குற்றம் இழைத்தவர்கள் மீது கிரிமினல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பான காவல்துறை மீது அடித்தது, காயங்கள் ஏற்படுத்தியது, வாகனங்களை உடைத்தது உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ சிகிச்சை, புகைப்பட ஆதாரங்கள் உள்ள நிலையில் உடனே காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட வேண்டும்.
போராட்டத்தைக் கலைப்பதற்கு எவ்விதத் தேவையில்லாமல் வாகனங்களை உடைத்த காவலர்கள் மீது பொதுச்சொத்துகள் சேதப்படுத்தும் சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பளத்திலிருந்து நட்ட ஈடு பெறப்பட வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் குறித்து உடனே பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவேண்டும்.
காவல்துறையும், போராடிய மக்களும் இரு தரப்பாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை மதுரை மாநகர், புறநகர் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவின் கீழ் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணை அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.உடனே இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமைக்காக நடந்த பெருந்திரள் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று
உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக