சனி, 11 பிப்ரவரி, 2017

தேக்கம்பட்டி கிராமம்.. காட்டுயானைகள்.. வாழை விவசாயிகளின் உழைப்பு பாழாகி..

தேக்கம்பட்டி மக்கள் குரல் அரசின் காதை எட்டுமா?
கோவை மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ளது தேக்கம்பட்டி கிராமம். மேட்டுப்பாளையத்தில் இருந்து மேற்குபுறமாக சென்றால் தேக்கம்பட்டி கிராமம். மலையடிவாரத்தில். அந்தப் பக்கம் 16 கி.மீ போனால் கேரளா.
இரண்டு வருடங்களுக்கு ஊர் மக்கள் மகிழ்ந்து போயினர், தங்கள் ஊர் பிரபலமாகிறதென. இப்போது விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்தது. தேக்கம்பட்டி கிராமத்திற்கு ஒருபுறம் மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என. அதற்கு முன்பாக இந்த யானைகள் முகாம் முதுமலையில் நடைபெற்றது. ஆம், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு கோவில் யானைகளுக்கு நடைபெறும் புத்துணர்வு முகாம்.

மலைமீது 40க்கு மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன. அது தான் பிரச்சினையாகி விட்டது.
கடந்த ஆண்டு கிட்டம்பட்டி கிராமத்தில், 30க்கு மேற்பட்ட காட்டுயானைகள் நுழைந்து வாழைத் தோப்பை துவம்சம் செய்து விட்டன. விவசாயிகளின் உழைப்பு பாழாகிப் போனது.
முகாம் நடைபெறும் இடம் காட்டு யானைகள் வழக்கமாக நீர் அருந்தும் இடமாதலால் காட்டு யானைகள் முகாமிற்குள் நுழையும் வாய்ப்புக்கள் அதிகமாகி விட்டது.
யானைகள் நீர் அருந்தும் வழித்தடம் அடைக்கப்படுவதால் காட்டு யானைகள் தேக்கம்பட்டி,தாசனூர் ,NG புதூர் ,RG புதூர் , தொட்டதாசனூர் ,நெல்லித்துறை,கிட்டாம் பாளையம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழிப்பதும் ,பொது மக்களை கொலைவெறித் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.
அடுத்து, இது யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதாலும் முகாமில் உள்ளவை பெரும்பாலனவை பெண் யானைகள் என்பதாலும் எதிர்பாலினக் கவர்ச்சியின் காரணமாக காட்டு யானைகளின் வருகையை மேலும் அதிகப்படுத்துகிறது.
முகாமில் உள்ள யானைகளை காண அனுமதிக்கப்பட்ட பார்வை நேரத்தில் வரும் பார்வையாளர்கள் தேக்கம்பட்டி-பத்திரகாளி அம்மன் சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும் ,சாலையோரத்தில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைப்பதாலும் வாகன நெருக்கடி ஏற்படுவதால் இப்பகுதியில் செல்லும் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
பார்வை நேரங்களில் மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுப்புற கிராம மக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர் .
முகாம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் இருப்பதால் காட்டு யானைகள். பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்குகின்றன.
யானைகள் முகாம் நடைபெறும் இடத்தை பொது மக்களுக்கு ஊறு விளைவிக்காதவாறு முதுமலை வனப்பகுதியில் நடத்த வேண்டும். காட்டு யானைகள் சேதப்படுத்தும் விவசாயப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேக்கம்பட்டி முதல் முகாம் நடைபெறும் வரை மின் விளக்குகள் அமைக்க தேக்கம்பட்டி ஊராட்சி 3 இலட்சம் மின் வாரியத்திற்கு பணம் செலுத்தியும் காலம் தாமதம் செய்யும் மின் வாரியத்தை பணிகளைத் தொடங்க நிர்பந்திக்க வேண்டும்.
முகாமை மாற்றும் வரை, முகாமிற்கு பார்வை நேரத்தில் வரும் மக்கள் தங்கள் வாகனங்களை பத்திரகாளி அம்மன் கோவிலில் உள்ள வாகன நிறுத்திமிடத்தில் நிறுத்த உத்தரவிட வேண்டும்.
வியாபாரிகள் சாலைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்கத் தடை விதிக்க வேண்டும்.
மிக முக்கியமானது, முகாம் நடக்கும் 48 நாட்களும் வனத்துறையினர் ரோந்து வாகனங்களில் தேக்கம்பட்டி,நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கும் ,பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் .
அதே போல, காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளை முகாமிற்கு வரவழைக்க வேண்டும்
ஊடகத் துறை நண்பர்கள் யானைகள் முகாமால் தேக்கம்பட்டி, நெல்லித்துறை ஊராட்சி மக்கள் படும் இன்னல்களை உரிய மக்கள் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இந்த கிராமத்தை சேர்ந்த சகோதரர் திலீப் பொறியாளராக பணிபுரிந்தாலும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
# எளியவர்கள் குரலுக்கு நியாயம் கிடைக்கட்டும்!<மக்கள்_குரல்</ சிவசங்கர் எஸ்.எஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக