வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

அரசுக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு!

மின்னம்பலம் :திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கடந்த இரண்டு நாட்களுக்குமுன்னர் நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையொட்டி, இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், வாகை சந்திரசேகர், முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியன் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாளை கூடவிருக்கும் சட்டசபை கூட்டத்தின்போது நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக-வின் நிலைப்பாடு குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது திமுக எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் வாக்களிக்கக் கூறினால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது. தலைமை எடுக்கும் முடிவை எம்.எல்.ஏ.,க்கள் பின்பற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, திமுக-வின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் முடிவடைந்த பிறகு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அரசு பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறான அரசாக உள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவரும் நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்த்து திமுக வாக்களிக்க முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக