சனி, 11 பிப்ரவரி, 2017

என்ஜீனியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு! இனி சாமானியனுக்கு எல்லாம் கனவுதான்?


நாடு முழுவதும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் தேசிய அளவில் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதுமட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட ஆறு மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு முதல் மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுதவுள்ளனர்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு மிகவும் எளிதாக இருக்கும். மற்ற மாணவர்களுக்கு இதை எழுதுவதற்கு கடுமையான பயிற்சி அவசியம். இதனால் தமிழகத்தில் செயல்பட்டுவரும் 24 மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும். இதனால் நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வருகிற 2018-19ஆம் கல்வியாண்டில் இதை அமல்படுத்தும்வகையில் விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தங்களுக்கென்று தனியாக நுழைவுத் தேர்வுகளை தற்போது நடத்தி வருகின்றன. அதற்கும் தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் தரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவதற்கு பொது நுழைவுத் தேர்வு திட்டம் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 3,300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கை நிர்ணயிக்கப்படும். ஆனால் அதில் பாதி இடங்கள் மட்டுமே நிரப்பப்படும்.
இதனால் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் பொறியியல் படிப்பு குறித்து அடிப்படை திறமையில்லாத மாணவர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். இதன் விளைவாக மாணவர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு 737.000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்தனர். இவர்களில் 50 சதவிகித பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக