வியாழன், 16 பிப்ரவரி, 2017

மலேசியாவில் வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை


மலேசியாவில் வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன சியோல், மலேசியாவில் வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
 குடும்ப ஆட்சி வடகொரியாவில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டை நிறுவிய தேசத்தந்தை கிம் இல் சங். அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகன், கிம் ஜாங் இல் ஆட்சிக்கு வந்தார். அவர் 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கிம் ஜாங் நாம் (வயது 46), கிம் ஜாங் சுல் (36), கிம் ஜாங் அன் (33) என 3 மகன்கள், கிம் யோ ஜாங் (30) என ஒரு மகளும் உண்டு.
 ஆட்சிக்கு போட்டி தந்தையின் மரணத்துக்கு பின்னர் மூத்த மகனான கிம் ஜாங் நாம் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கடைசி மகனான கிம் ஜாங் அன் ஆட்சிக்கு வந்தார். அவர் இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஆனால் அவருக்கு போட்டியாக திகழ்ந்து வந்தவர் அவரது அண்ணன் கிம் ஜாங் நாம். இருவரும் அண்ணன், தம்பி என்றாலும், ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள்.


சீனாவில் வாழ்க்கை

கிம் ஜாங் நாம் போலி பாஸ்போர்ட்டுடன் ஜப்பானில் 2001-ம் ஆண்டு, தனது மகன் மற்றும் 2 அடையாளம் தெரியாத பெண்களுடன் பிடிபட்டார். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கிம் ஜாங் நாம் சீனாவில், மக்காவ் பகுதியில் வசித்து வந்தார். சமீப காலமாக அவர் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். மலேசியாவில் அவருக்கு ஒரு காதலி இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

விஷம் தந்து கொலை

இந்த நிலையில், கிம் ஜாங் நாம், கடந்த 13-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த 2 பெண்கள் கொடிய விஷ திரவத்தில் நனைத்து எடுத்த ஊசிகளைக் கொண்டு அவரை குத்தி வீழ்த்திவிட்டு, ஒரு வாடகைக்காரில் ஏறி சிட்டாக பறந்து விட்டனர்.

மயங்கி சரிந்த அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்கள் உளவாளிகள் என கூறப்படுகிறது.

உறுதியானது

முதலில் கொல்லப்பட்டது கிம் ஜாங் நாம்தானா என உறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது தென்கொரியா, அதை உறுதி செய்துவிட்டது.

கிம் ஜாங் நாம், தனது தந்தை இறந்தபோதுகூட, தம்பி கிம் ஜாங் அன்னால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் செல்லவில்லையாம்.

தனது ஆட்சிக்கு போட்டியாக கிம் ஜாங் அன், அண்ணன் கிம் ஜாங் நாமை கருதி வந்தார். ஏற்கனவே கிம் ஜாங் நாமின் ஆதரவாளராக திகழ்ந்துவந்த தன் மாமா (தந்தையுடன் பிறந்த சகோதரியின் கணவர்) ஜாங் சங் தாயீக்கை தேச துரோக குற்றம் சாட்டி 2013-ம் ஆண்டு கொன்று விட்டார். பல முறை கிம் ஜாங் நாமை கொல்ல முயற்சி நடந்து, அவர் தப்பித்து வந்துள்ளார். ஆனால் இந்த முறை சிக்கி விட்டார்.

ஒரு பெண் கைது

எனவே இப்போது கிம் ஜாங் நாம் படுகொலையில் அவரது தம்பி கிம் ஜாங் அன்னின் தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தென் கொரிய பிரதமர் ஹவாங் கியோ ஆன் நேற்று முன்தினம் கருத்து தெரிவிக்கையில், “கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்படும்பட்சத்தில் அது வடகொரிய ஆட்சியின் கொடூரமான, மனிதநேயமற்ற தன்மையை காட்டுவதாக அமையும்” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே கிம் ஜாங் நாம் உடல் பிரேத பரிசோதனை கோலாலம்பூர் ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. கொலையாளிகள் குறித்து ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, மலேசிய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். டொன் தி ஹூவாய் என்ற பெயரில் வியட்நாம் பாஸ்போர்ட்டுடன் ஒரு பெண் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே வடகொரியாவில் கிம் ஜாங் நாமின் தந்தை கிம் ஜாங் இல்லின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி உள்ளன  தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக