சனி, 25 பிப்ரவரி, 2017

விகடன் :செத்தது ஜனநாயகம்... இது பச்சைப் படுகொலை!

கழுகார் வந்ததும், இந்த இதழ் ஜூ.வி அட்டையை எடுத்துப் பார்த்தார். புருவத்தை உயர்த்தினார். ‘‘கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை இதைவிட சரியாக எப்படிச் சொல்ல முடியும்? சமீப நாட்களில் மத்திய அரசும், பி.ஜே.பி தலைமையும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், சபாநாயகரும், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இணைந்து நடத்தியவற்றை என்னவென்று சொல்வது?” என்ற கேள்வியுடன் நம்மை நோக்கி நிமிர்ந்தவர், ‘‘திரைமறைவுக் காட்சிகளை மட்டும் சொல்கிறேன்’’ என ஆரம்பித்தார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுக் கத்தினாலும் அவருக்கு 11 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் செல்வாக்கு இல்லை. சசிகலா அணியில் 122 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்க 117 உறுப்பினர்கள் போதும் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பிழைத்துவிடும் என்பதுதான் யதார்த்தமான நிலைமை. ஆனால், பன்னீருக்கு காலஅவகாசம் வாங்கித்தர ஸ்டாலின் நினைத்தார். ‘கூவத்தூரில் இருந்து           எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினால், பன்னீர் பக்கம் வந்துவிடுவார்கள்’ என்பது ஸ்டாலினின் எதிர்பார்ப்பு. எனவே, ‘சட்டமன்றத்துக்குச் சென்று வாக்கெடுப்பைத் தள்ளிவைக்கக் கோருவது, அதற்கு சபாநாயகர் சம்மதிக்கவில்லை என்றால் அதைக் கடுமையாக எதிர்த்து கலவரச் சூழலை ஏற்படுத்துவது, அதன் மூலமாக வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பது’ என்பதே தி.மு.க-வின் திட்டம்...”


‘‘ஓஹோ!”

‘‘தி.மு.க என்ன முடிவெடுக்கும் என்று தெரிந்துகொள்ள உளவுத்துறை தவித்தது. அவர்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ‘வாக்கெடுப்பைப் புறக்கணிப்பார்கள்... அல்லது பன்னீரை ஆதரிப்பார்கள்’ என்று ஒரு பக்கம் தகவல் போனது. இன்னொரு பக்கம், ‘கவர்னரைச் சந்தித்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தி.மு.க கோரிக்கை வைக்கப்போகிறது’ என்றும் சொல்லப்பட்டது. மோதல் சூழ்நிலைக்கு தி.மு.க தயாராகி வருகிறது என்ற தகவல், வாக்கெடுப்புக்கு முந்தின நாள் இரவுதான் தெரியவந்தது!”

‘‘யார் சொன்னது?”

‘‘எல்லாம் சாதி மற்றும் வட்டாரப் பாசம்தான். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதை, பல்வேறு கட்சிகளில் உள்ள அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்கிறார்கள். அப்படிச் சிலர் தி.மு.க-விலும் இருக்கிறார்கள். அவர்கள்தான், உளவுத்துறைக்கு அந்தச் செய்தியைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்களாம். அந்தத் தகவலை, அரசியல் நுணுக்கம் அறிந்த உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், எடப்பாடி வட்டாரத்துக்குச் சொன்னார். ‘தி.மு.க-வுக்கு  அ.தி.மு.க-வினர் பதிலடி தர ஆரம்பித்தால், சட்டசபையில் பெரும் மோதல் நடக்கும். அப்படி நடக்க வேண்டும், இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆக வேண்டும் என்று தி.மு.க நினைக்கிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே ஆட்சியைக் காப்பாற்ற முடியும்’ என்று டேவிட்சன் சொல்லியிருக்கிறார். இதை கூவத்தூரில் இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குச் சொல்லி, கிளாஸ் எடுக்கப்பட்டது. அதனால்தான் இடியே விழுவது மாதிரியான பதற்றம் சட்டசபையில் ஏற்பட்டபோதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அமைதியாக இருந்தார்கள்.”
‘‘தி.மு.க-வின் திட்டம் இதனால்தான் தோற்றதா?”

‘‘ஆமாம்! சும்மா கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி பன்னீர்செல்வத்துக்கு காலஅவகாசம் வாங்கித் தரவே தி.மு.க நினைத்தது. ஆனால், சபாநாயகரை சங்கடப்படுத்தும் நிலைக்கு தி.மு.க உறுப்பினர்கள் போவார்கள் என ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. அதுவே அவர்களை மொத்தமாக சபையை விட்டு வெளியேற்றுவதற்கு வழி செய்துவிட்டது. எதிர்ப்பு வாக்குகளே 11 தான் என்ற நிலைமையையும் உருவாக்கிவிட்டது...”

‘‘பன்னீருக்கு பி.ஜே.பி மேலிடத்தின் ஆதரவு இருக்கிறது என்றும், எனவே அவருக்குத்தான் கவர்னர் பச்சைக்கொடி காட்டுவார் என்றும் சொல்லி வந்தார்களே?”

‘‘திடீரென கவர்னர் மாறியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ‘பன்னீரின் செல்வாக்கு இவ்வளவுதான் என மேலிடத்துக்கு கவர்னர் சொன்னதும், அவர்களின் எதிர்கால நலன்களைக் கருதி எடப்பாடியின் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்’ என ஒரு தரப்புச் சொல்கிறது. ‘தனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துகளை மட்டுமல்ல, அவர்களின் வீடியோ பேட்டிகளையும் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் கொடுத்துவிட்டார்’ என்று சொல்லப்படுகிறது. இவை அரசியல் ரீதியாக சொல்லப்படுபவை!”

‘‘ஓஹோ... அப்படியானால் வேறு காரணங்களும் உண்டோ?”

‘‘திரைமறைவுக் காரணங்கள் எனச் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. மாநிலம் தாண்டிய முக்கியப் பொறுப்பில் இருக்கும் வி.வி.ஐ.பி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினாராம் எடப்பாடி பழனிசாமி. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சமூகப் பாசத்துடன், பசையும் ஒட்டியபடி பேசப்பட்டதாம். அவர், கவர்னரிடம் பேசியபிறகுதான் இரக்க சிந்தனையுடன் எடப்பாடியை கவர்னர் அழைத்தார் என்கிறார்கள். இன்னொரு பக்கம், திவாகரன் தனது வழக்கமான பாணியில் இறங்கி, கவர்னரை கரைக்க ஆரம்பித்தார். அதுவும் சேர்ந்துதான் வித்யாசாகர் ராவை மனம் மாறவைத்ததாம்!”

‘‘அது சரி!’’

‘‘சசிகலா குடும்பத்துப் பிரமுகர் ஒருவர் சொன்ன டயலாக்கை சொல்லட்டுமா? ‘பி.ஜே.பி என்கிற கிளட்ச்சில் இருந்து கவர்னரைக் கழற்றிவிட்டோம். அவ்வளவுதான்’ என்று சொல்லி அந்தப் பிரமுகர் சிரித்தார். இதிலிருந்து புரிகிறது அல்லவா? ‘தமிழகத்தின் அடுத்த அரசியல் நிகழ்வுகளின்போது புது கவர்னர்தான் இருப்பார். வித்யாசாகர் இருக்கமாட்டார்’ என்று இப்போது பி.ஜே.பி-யினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்...’’

‘‘அடுத்த நிகழ்வுகள் என்ன? பன்னீர்செல்வம் ஏன் அடக்கியே வாசிக்கிறார்?’’

‘‘மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவுப் போட்டுள்ளது. தேர்தல் நடக்கும்போது எடப்பாடி அரசுக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு என்று தெரிந்துவிடும். இதைக் கணக்குப்போட்டுதான் பன்னீர் அமைதிகாக்கிறார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோதே, உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை தோற்றிருக்கிறது. அதன்பிறகு, சில இடைத்தேர்தல்கள், ஒரு பொதுத்தேர்தல்... என்று பட்டியலே போடலாம். இப்போது அதுவல்ல விஷயம்! சசிகலாவை முன்னிறுத்தி இரட்டை இலை சின்னத்தில், தேர்தலை சந்தித்தால், நிச்சயமாக மக்கள் எடப்பாடி தரப்பினரைத் தூக்கியெறிவார்கள். எனவே, தங்களுக்கு அந்த வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறார்கள் பன்னீர் தரப்பினர்.’’

‘‘அதெல்லாம் சரி! ஆறு எம்.எல்.ஏ-க்கள் ‘டைவ்’ அடித்தால் எடப்பாடி கதி, அதோ கதிதான்! எப்படி  எம்.எல்.ஏ-க்களை இவர்கள் பிடியில் வைத்திருக்கப் போகிறார்கள்?’’

‘‘அவர்கள் கொடுத்த சில வாக்குறுதிகளைச் சொல்கிறேன். மதுரை மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் இருவரை, கூவத்தூரில் சந்தித்த சசிகலா தரப்பினர், ‘உங்கள் சமூகத்துக்கு டெல்டா ஏரியாவில் பலமுறை அமைச்சர் வாய்ப்பு தந்துவிட்டோம். திருப்தியாக இல்லை. இந்தமுறை, உங்களுக்குத் தருகிறோம்’ என்றார்களாம். இன்னொரு எம்.எல்.ஏ-விடம்,   ‘எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பிறகு, உங்கள் சமூகத்துக்கு அமைச்சர் பதவித் தரவில்லை. நாங்கள் தர முடிவுசெய்துள்ளோம்’ என்றார்களாம். வேறு பல எம்.எல்.ஏ-க்களிடம் பல வாரியத்தலைவர் பதவிகளைப் பட்டியலிட்டு, ‘இதில் எது உங்களுக்கு வேண்டும்?’ என்றார்களாம். இதனால் பலரும் கனவில் மிதக்கிறார்கள். இப்போதே கரன்சியாகவும் தங்கமாகவும் பெரும்தொகை தரப்பட்டதாக பன்னீர் தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள். எடப்பாடியை ‘தங்க முட்டையிடும் வாத்து’ கதையுடன் ஒப்பிட்டு, எம்.எல்.ஏ-க்கள் கிண்டலடிக்கிறார்கள்.’’ 
‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்புப் புலனாய்வு அதிகாரியான ஐ.ஜி குணசீலன் ஓய்வுபெற்ற பின், நான்கு முறை பதவிநீட்டிப்புப் பெற்றாரே? இனி அவரின் நிலை என்னவாகும்?’’

‘‘உச்ச நீதிமன்றத்தில் ‘சசிகலாவுக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்ததே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் 21 வருட மைல் கல்’ என்று பேசிக்கொள்கிறார்கள். வழக்கின் அன்றாட நிகழ்வுகளை கவனித்துவந்தவர், குணசீலன். அவரின் பதவிநீட்டிப்பு முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் ரிவியூ பெட்டிஷன் என்று சசிகலா தரப்பினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையில் இறங்கினால், குணசீலனின் பணி(?) நாட்டுக்குத்தேவை என்றே கருதுவார்கள். அவருக்கு பதவிநீட்டிப்பு எவ்வளவு காலம் கிடைக்கும் என்பது நீதிதேவதைக்கே வெளிச்சம்...’’

‘‘பெங்களூரு சிறைச்சாலையில், சசிகலா எப்படி இருக்கிறார்?’’
‘‘சிறைச்சாலைக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பு கோர்ட் வளாகத்தில், சசிகலா அவரின் உறவினர்களை அழைத்தார். கணவர் எம்.நடராசன், அவரின் சகோதரர் எம்.ராமச்சந்திரன், இளவரசியின் சகோதரர் கண்ணதாசன் உள்ளிட்ட சிலரிடம் சசிகலா மனம்விட்டுப் பேசினாராம். கண்கலங்கிய நடராசன், தான் வழக்கமாக அணிந்திருக்கும் சால்வையை எடுத்து சசிகலாவிடம் கொடுத்தாராம். அவரும் அதை உணர்ச்சிவசப்பட்டு வாங்கிக் கொண்டாராம்.’’

‘‘தமிழக உளவுத்துறையில் கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட ஜெயச்சந்திரன், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் சம்பந்தியாச்சே? எங்கே அவரைக் காணோம்?’’

‘‘நிர்வாகப்பிரிவில்தான் அவர் இருந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் என்று ஒரு செய்தி திடீரென பரவி அடங்கியதல்லவா? அதே நேரத்தில், ஜெயச்சந்திரனை மாற்றச் சொல்லி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபமாகச் சொல்ல... உடனடியாக, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். 24 மணி நேரத்தில் போய் புதிய பணியில் சேரும்படி டி.ஜி.பி உத்தரவிட்டார். அதனால்தான், சென்னை பக்கம் ஜெயச்சந்திரனின் தலை தென்படவில்லை.’’

‘‘அ.தி.மு.க-வில் தற்போது தினகரன் கை ஓங்கிவிட்டதே?’’

‘‘கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருக்கும் தளவாய்சுந்தரம், ஆரம்பத்தில் இருந்தே தினகரனின் ஆதரவாளர். சமீபகால அனைத்து நிகழ்வுகளின்போதும், தினகரனால் தளவாய் முன்னிலைப்படுத்தப்படுகிறார். தளவாய்க்கு விரைவில் பெரும் பொறுப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.’’

‘‘எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொகுதி பக்கம் போனார்களா?’’

‘‘செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 98 எம்.எல்.ஏ-க்கள் இன்னும் சென்னையை விட்டுப் போகவில்லை. எம்.எல்.ஏ ஹாஸ்டலில்தான் ‘டேரா’ போட்டிருக்கிறார்கள். பலர் பழைய போன் எண்ணை மாற்றிவிட்டார்கள். சொந்த ஊருக்குச் சென்றவர்களும், மறந்தும்கூட தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ ஆபீஸ் பக்கம் போகவில்லை. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அரசு அதிகாரிகள், எந்த விஷயமானாலும் தங்களைப் பார்க்க வரவேண்டாம் என்று அன்புக்கட்டளையும் போட்டிருக்கிறார் களாம். பொதுவாக, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், ‘வருகிற ஓரிரு மாதங்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புத் தந்தால் நல்லது’ என்று எடப்பாடியிடம் வற்புறுத்தி வருகிறார்களாம்...’’

‘‘ஒருவழியாக முதல்வர் சீட்டில் எடப்பாடி அமர்ந்துவிட்டாரே?’’

‘‘முதல்வர் ஆனவுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கிய எடப்பாடி, 20-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்க கோட்டைக்கு சென்றார். நல்ல நேரம் பார்த்து 12.38 மணிக்கு ஜெயலலிதா அமர்ந்த அதே அறையில், அதே சீட்டில், எடப்பாடி அமர்ந்தார். ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர், நிருபர்களைச் சந்தித்து, வறட்சி நிவாரணம், விவசாயிகள் தற்கொலை, குடிநீர் தட்டுப்பாடு ஆகிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார். இதையடுத்து, ‘மணல் விற்பனையை நேரடியாக அரசே செய்யுமா?’ என்ற கேள்வி கேட்டபோது அவரது முகம் சுருங்கிவிட்டது. அந்த கேள்விக்கு பதிலே சொல்லாமல் பேட்டியை அத்துடன் முடித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டார்’’ என்று சொல்லிமுடித்துப் பறந்தார் கழுகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக