வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

இருநூறு டன் கேரட்டை அழித்த ஒரு விவசாயியின் துயரம் !

அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே இல்லை.
அசோக்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது மற்றும் பணமதிப்பு நீக்கம் என இரண்டு கத்திகளை மோடிஅரசு தமிழக விவசாயிகளின் முதுகில் பாய்ச்சியிருக்கிறது. காவிரி விவசாயம்தான் இம்முறையும் மத்திய அரசின் துரோகத்தால் சுடுகாடாகிவிட்டதென்றால் ஏனைய பகுதிகளின் விவசாயிகளின் விளைபொருட்களை விதைப்பதற்கும், அப்படியே விதைத்தாலும் பராமரிப்பதற்கும், தப்பித்தவறி விளைந்துவிட்டால் அதை அறுவடை செய்யவதற்கும் , அறுவடையே செய்தாலும் அதை விற்பதற்கும், தடையை உருவாக்கி விவசாயிகளின் எல்லா வழியிலும் தாக்கி  “செக் மேட்” செய்திருக்கிறது மோடி பாசிச கும்பல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் நகரத்தை சுற்றிலும் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாகும், இங்கு நிலவும் குளிரான தட்பவெப்பத்தின் காரணமாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகிய காய்கறி வகைகளும், ரோஜா,சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளும் அதிகம் விளையக்கூடிய பயிர்களாகும் அதுதவிர சோளம்,கேழ்வரகு, கம்பு ,உள்ளிட்ட தானிய வகைகளும் கீரை வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் சென்னை,பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பபடுகிறது.
விவசாயி அசோக்
ஓசூர் அருகே தாசரப்பள்ளி எனும் கிராமத்தில் அசோக் எனும் விவசாயிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் கேரட் பயிரிட்டிருந்தார், விதைத்ததில் இருந்து விதைக்கு, உரத்துக்கு, பராமரிப்புக்கு , பூச்சிக்கொல்லிக்கு என மொத்தமாக பத்து லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். ஏக்கருக்கு இருபது டன் வீதம் பத்து ஏக்கருக்கு இருநூறு டன் அறுவடைக்கு தயாராய் இருந்த நிலையில் கேரட்டின் விலை மார்கேட்டிலேயே சில்லறை விற்பனையில் கிலோ பத்து ருபாய்க்கு கீழே வீழ்ந்துவிட்டது. மொத்த வியாபாரிகள் கிலோ இரண்டு ருபாய்க்கு கேட்டிருக்கிறார்கள்.அதிலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கயால் இப்போது வெறும் ஒரு லட்சம் மட்டுமே பணம் தர முடியும் எனவும் வியாபாரிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். குறைந்த பட்சம் அறுவடைக்கூலிக்கு அந்த பணம் ஆகுமென்றால் அதை அறுவடை செய்வதில் அசோக்கிற்கு எந்த சிக்கலும் இல்லை எனக் கூறுகின்றார்.
அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு  ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா  காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே  இல்லை. மேலும்  அசோக்கிற்கு தேவையான அளவு ரொக்கப்பணம் தர வங்களிடமும் கையிருப்பு இல்லை, ஒரு வேளை இருந்தாலும் அதும் “செல்லாத” புது இரண்டாயிரம் ரூபாய்த்தாள். கறிக்குதவா ஏட்டுச்சுரைக்காய். வியாபாரிகள் தரும் ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு பத்து ஏக்கர் நிலத்தில் கேரட்டை அறுவடை செய்து சுத்தம் செய்ய தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாது. அந்த தொகையும்  போதாது, நோட்டு பிரச்சனையால் எங்கும் கடன்வாங்க முடியவில்லை என்று மனமுடைந்த அவர் மொத்த விளைச்சளையும் அதாவது இருநூறு டன் கேரட்டையும் டிராக்டரை கொண்டு உழுது வயலிலேயே அழித்துவிட்டார். ஆம், மொத்தம் இரண்டுலட்சம் கிலோ கேரட்.
மண்ணோடு மண்ணாய்ப் போனது நூற்றுக்கணக்காண விவசாயிகளின் உழைப்பும், செலவழிக்கப்பட்ட நீரும், மின்சாரமும் , அவரின் முதலீடும். மாதக்கணக்கில் உழைத்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு அவர் திட்டங்கள் (கடனை அடைக்கவோ, திருமணத்துக்கோ, மருத்துவச்செலவுக்கோ, குழந்தைகளின் படிப்புச்செலவுக்கோ ) வைத்திருக்கும் போது  அது ஈடேறாமல் சொந்த டிராக்டரை ஓட்டி விளைந்த பயிரில் ஓட்டி அழிக்கும் போது அவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் ?
இது எல்லா பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறது ஆனாலும் எந்த அரசு அதிகாரியும் (வி.ஏ.ஓ தாசில்தார் என ஒருவரும்) வந்து பார்க்கவோ விசாரிக்கவோ இல்லை. இதுதான் விவசாயிகளுக்கான ஆட்சியாக மாநில மத்திய அரசுகள் மார்தட்டிக்கொள்ளும் யோக்கியதை, இந்த லட்சணத்தில்தான் விவசாயிகளின் வருமானதை இருமடங்கு ஆக்கப்போவதாக  நம்மை நம்பச்சொல்கிறார் மோடி.
கூலிக்குக் கூட கட்டுப்படியாகத காரணத்தால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட கேரட்
கூலிக்கு கொடுக்கக் கூட கட்டுப்படியாகத காரணத்தால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட கேரட்
கேரட் விவசாயம் மட்டுமல்ல. இன்னொமொரு மூன்று ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருக்கிறார். ஏற்கனவே அவரின் நிலத்தை சுற்றி இருக்கும் விவசாயிகள் தக்காளியை ஆள் வைத்து பறிக்க  முடியாமலும்,   விலை இல்லாமலும் வயலிலேயே அவற்றை அழித்து வருகின்றனர். அதன் நிலமை என்னவாகும் எனத்தெரியவில்லை என்கிறார் அசோக். ஏற்கனவே கேரட் விதைப்புக்கு வாங்கிய கடன் மிச்சமிருக்கிறது. அதையே அடைக்க முடியவில்லை. தினமும் நாற்பது தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். சராசரியாக மாதம் ஐந்து லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறது. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்  அந்த நாற்பது பேருக்கும் சம்பளமளிக்க இயலாது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.
சம்பளம் சுத்தமாக கொடுக்க முடியாமல் நிலத்தை தரிசாக போட ஒருவேளை முடிவெடுத்தால் அந்த நாற்பது பேரின் குடும்பமும் பட்டினிதான், கேரட் அதிகம் விளைந்திருப்பதால் பட்டினி, எவ்வளவு பெரிய முரண்பாடு? இது ஏதோ ஒற்றை விவசாயியின் கதை அல்ல. அசோக் இதில் ஒரு சோறு பதம். கிராமப்பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு வங்கிகளை முடக்கிவைத்திருப்பதால் இது ஏதோ விலை வீழ்ச்சியால் நடக்கும் வழக்கமான நடவடிக்கை என சுருக்கி பார்க்க முடியாது.
கிட்டத்தட்ட நாடுமுழுதும் விவசாயிகள், ரொக்கப்பணம் இல்லாமல் சம்பளமளிக்க முடியாமலும், கடன் பெற முடியாமலும், விதைக்க முடியாமலும், அறுக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விளைபொருட்கள் அழிந்து கொண்டிருப்பதும் அதனுடன் சேர்ந்து விவசாயியும் மடிந்து கொண்டிருப்பதும் கண்கூடு. மேலும் அசோக் லாபத்தை எதிர்பார்த்து இருநூறு டன் கேரட்டை அழிக்கவில்லை. மேற்கொண்டு நான்கு ஐந்து லட்சம் கடனாளியாக முடியாது என்பதால் அழித்திருக்கிறார்.
அடுத்து என செய்வது எனப்புரியவில்லை என்கிறார் அசோக்.
ஒருமாதம் கழித்து மீண்டும் முட்டை கோஸ் அல்லது கேரட் பயிர் செய்யலாம் என்றிருக்கிறேன் என்கிறார் . நிஜத்தில் உழைத்து பிழைத்தும் கூட விவசாயியின் வாழ்க்கையை சீட்டாட்டம் போல மாற்றி வைத்திருக்கிறது இந்த அரசுகள். எல்லா முறையும் நட்டம், வரும் எனத்தெரிந்தே விதைப்பதைப் போன்ற துயரம் எதுவுமில்லை. அசோக்கின் நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைக்க என்ன இருக்கிறது? வைத்துதான் என்ன நடக்கும்? அதை அசோக் போன்ற விவசாயிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். நட்டத்தை தாங்கிக்கொள்ள முடியும் போது விவசாயிகள் பயிரை அழிக்கிறார்கள் அது முடியாத போது மாண்டு போகிறார்கள்.
அரசின் கொள்கை முடிவே பெரும்பான்மை விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், என நகரத்தின் எல்லையை விரிவாக்கிக்கொண்டே பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றத் துடிக்கிறது மோடி தலைமையிலான பாசிசக்கும்பல். தொழில் நுட்பத்தை புகுத்துகிறேன் என தற்சார்பை ஒழித்துக்கட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திணிக்கிறது அரசு. நமது விதைகளை ஒழித்து பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் ஏகபோக விதைச்சந்தையின் கட்டுப்பாட்டில் விவசாயிகளை நிறுத்துவது, தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவது. தவறான ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கை மூலம் விலை வீழ்ச்சி அல்லது விலையுயர்வை ஏற்படுத்துவது, பெருமளவு நிலங்களை கார்பரேட்டுகளுக்கு கையளிப்பது ,சில்லறை விற்பனைச் சந்தையில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்து,  நாட்டை மறுபடியும் ஏகாதிபத்தியங்களின் காலனியாக்குவது தான் இவர்களின் திட்டமே அதைத் தான் வளர்ச்சி எனகூவுகிறார் மோடி.
IMG-20170103-WA0075காவிரியில் மோடி அரசு செய்த துரோகத்தால் கிட்டத்தட்ட நூறு விவசாயிகள் தமிழகத்தில் மட்டும்  மாண்டு போயிருக்கிறார்கள்.  தமிழக பினாமி அரசு வெறும் பதினேழு விவசாயிகள் மரணத்தையே கணக்கு வைத்திருக்கிறதாம். அந்த பதினேழு பேருக்கும் தலா மூன்று லட்சம் நிவாரணம் என்ற பெயரில் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதுமே விவசாயிகளின் தற்கொலையை அப்படியே பதிவு செய்யக்கூடாது என்பதுதான் காவல் நிலையங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்மொழி உத்தரவு. விவசாயி சாகிறான் என்பதையே ஒத்துக்கொள்ள விரும்பாத அரசுகளா அதற்கான தீர்வைத்தரப் போகிறது?
இந்த அரசுக்கட்டமைப்பை இயக்குவதே அல்லது அரசுக்கட்டமைப்பு இயங்குவதே உள்ளூர்  கார்பரேட்டுகளுக்காகவும், பன்னாட்டு கம்பெனிகளுக்காகவும் தான். விவசாயிகளின் பிரச்சனை அவர்களுக்கு தேவையுமல்ல முக்கியமும் அல்ல. அவர்களின் பிரச்சனையே விவசாயத்தை விட்டு வெளியேறாத விவசாயிகள் தான். இந்த ஆளத்தகுதி இழந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுவது என்பது இடிகின்ற வீட்டுக்கு சுண்ணாம்படிக்க முயற்சிப்பது போன்றது.  பெரும்பான்மை மக்களுக்கெதிரான இந்த கட்டமைப்பு பேரழிவைத்தான் நமக்கு பரிசாக வழங்கும். அதை நொறுக்கி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவாதவரை, ஊட்டச்சத்தில்லாமல் மடியும் குழந்தைகள் மற்றும் பயனில்லாமல் மண்ணிலேயே அழிக்கப்படும் கேரட்டுகளும் சேர்ந்த இந்த கொடூர முரண்பாட்டை சரிசெய்ய முடியாது.
-புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்
செல்- 9944958840.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக