செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பெரிய வீட்டு பிள்ளைகளின் கோடி ரூபாய் பந்தயக் கார்கள் ... ஊத்தி மூடப்படும் குற்றங்கள்?

கிழக்கு கடற்கரைச் சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்ற 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் தனிப்படை உருவாக்கியுள்ளனர்.
இருப்பினும் செல்வாக்குமிக்கவர்களின் வாரிசுகள் தொடர்ந்து கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிறு அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கார்களைப் பிடிப்பதற்காக சோதனையில் ஈடுபட்டனர். இதில் 9 கார்கள் மட்டுமே பிடிப்பட்டன. மீதமுள்ள 6 கார்கள் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டன. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போது சொகுசுக் கார் ஒன்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் காலில் ஏற்றியபடி வேகமாகச் சென்றுவிட்டது. இதையடுத்து, அந்தக் காரை உத்தண்டி சுங்கச்சாவடியில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர். மேலும் பந்தயத்தில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட கார்களில் இருந்தவர்களின் பெயர்கள் முகேஷ் (32) விக்னேஷ்வர் (30) சித்தார்த் (26) கிஷால் ( 27) சங்கர் (31) பிரசன்னா (28) கரண் ( 32) கீர்த்தி ராஜேந்திரன் (32) யஷ்வந்த் (30), ராகவகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கார்கள் சுமார் 150 கி.மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்ததாக காவல்துறையினரும் பொதுமக்களும் கூறியுள்ளனர். இந்நிலையில், பிடிபட்ட 9 பேர் மீது 7 பிரிவுகளிலும், அதிகாரி மீது காரை ஏற்றிச்சென்ற ராகவகிருஷ்ணன் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் வாரிசுகள் என்பதால் காவல்துறையினருக்கு உயரதிகாரிகளிடமிருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீலாங்கரை போக்குவரத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரி ஒருவர், ‘பந்தயத்தில் ஈடுபட்ட அனைத்துக் கார்களும் அதிக எடை, அதிக ஒலி எழுப்பும் அதிரும் தன்மைகொண்டவை. பிடிபட்ட இரண்டு கார்கள் புதுச்சேரி பதிவெண் கொண்டவை. இந்த வகைக் கார்கள் பொது இடங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டவை. இந்தக் கார்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

பிடிபட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 279 (பொதுப் பாதையில் முரட்டுத்தனமாக கார் ஓட்டுதல்), 336 (உயிருக்கு ஆபத்து விளைவித்தல்), 353 (அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபடுதல்), 184 (அரசு ஊழியரின் அதிகாரத்தை தடுத்தல்), 189 (அரசு ஊழியருக்கு கேடு விளைவிப்பதாக அச்சுறுத்தல்), 177 (பொய் தகவல் கொடுத்தல்), 332 (அரசு ஊழியருக்கு காயம் ஏற்படுத்தல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கு என மொத்தம் 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 10 கார்களும் தற்போது கானத்தூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதை நேற்று சோழிங்கநல்லூர் ஆர்டிஓ ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் கார் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் கொண்டு வராததால் இன்று ஆய்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக