திங்கள், 27 பிப்ரவரி, 2017

கிரிமினல் அரசாங்கம் ... விவசாயி வாழ்வு கேள்விகுறி ... தரகு முதலாளிகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு ராஜபோகம்

செக்கானுர் கதவணை உடைந்து வீணாக வெளியேறும் காவிரி நீர்.
காவிரிக்காக கர்நாடகவோடு மல்லுக்கட்டுகிறோம். ரொம்ப சரி, ஆனால், இங்கே என்ன செய்கிறோம்?” _ நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தனைச் சந்தித்து வறட்சியையும் விவசாயிகளின் சாவுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார்.

“காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் வாய்க்கால்களும், டெல்டா மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் தூர் வாரப்படாமல் புதர்ச் செடிகள் மண்டியும், சிதிலமடைந்தும் கிடப்பது; தூர் வாருவது என்ற பெயரில் நடந்துவரும் ஊழல்; மேட்டூருக்குக் கீழே நீரைச் சேமித்து வைக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாமல் இருப்பது; தமிழகத்தின் காவிரிப் படுகையில் நடந்துவரும் மணல் கொள்ளை” – என நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு காட்டிவரும் அக்கறையின்மை, அலட்சியம் என்ற கிரிமினல்தனத்தைச் சாடுவதாக இருந்தது, அவரது கேள்வி.
இந்தக் கேள்வி தமிழகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது என்ற போதும், காவிரிப் படுகையைப் பொருத்தமட்டில் மிகுந்த முக்கியத்துவமுடையது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 ஆயிரம் மில்லியன் கனஅடி (டி.எம்.சி.) ஆகும். இதில், கர்நாடகா தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கு 192 ஆ.மி.க.தான். மேட்டூருக்கு மேல் பகுதியில் கிடைக்கும் நீரின் அளவையும் சேர்த்தால், மேட்டூருக்கு ஆண்டொன்றுக்கு வந்து சேரும் நீரின் அளவு 217 ஆ.மி.க. மீதமுள்ள 202 ஆ.மி.க. நீரும் மேட்டூருக்குக் கீழே தமிழகத்தின் பகுதிகளில் கிடைக்கும் நீர் ஆகும்.
(ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி – பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் – 2013-14) நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகா மறுத்துவரும் இன்றைய நிலையில், தமிழகத்திலுள்ள காவிரிப் படுகையில் கிடைக்கும் நீரை முடிந்த அளவு சேமித்தும், சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்திக் கொண்டால்தான், மேட்டூர் அணை பாசனப் பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியையாவது உத்தரவாதப்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின், ஆளுங்கட்சிகளின் செயல்பாடுகளோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது.
” சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட கொள்ளிடம் ஆறு மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடும் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை எதுவும் இல்லாததால்,2013-ஆம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் நேராகக் கடலுக்குச் சென்றுவிட்டது. எனவே, தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ” 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
ஆற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் ஆற்று வழித்தடம் பள்ளம், மேடாகி நீரோட்டம் தடைப்பட்டு வீணாகும் நீர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவற்றுள் எத்துணை அணைகள் கட்டி முடிக்கப்பட்டன, கட்டி முடிக்கப்பட்டவை எந்த அளவிற்குத் தரமாக உள்ளன என்பதெல்லாம் பெரும் புதிராகவே உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மூத்த வேளாண் பேரவையினர், “மேட்டூருக்குக் கீழே கல்லணை வரையிலும் இருபத்து மூன்று தடுப்பணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, அதில் மூன்று தடுப்பணைகள் மட்டும்தான் இதுவரை கட்டப்பட்டுள்ளது என்றும், அப்படிக் கட்டப்பட்ட மூன்றில் செக்கானுர் தடுப்பணை கடந்த டிசம்பர் இறுதியில், அதாவது பல பத்தாண்டுகளில் காணப்படாத வறட்சி நிலவிய நேரத்தில் உடைந்துபோய், அரை டி.எம்.சி. தண்ணீர் வீணாகிப்போனதாக”க் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
கும்பகோணம் அருகே காவிரியின் கிளை நதியான அரசலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து போனதால், 2015-இல் பெய்த பெருமழையின் நீரையும் சேமிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் அந்தத் தடுப்பணை சீர்செய்யப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.
மேட்டூர் அணையை மிக நீண்ட காலமாகத் தூர் வாராததால், அதன் முழுக் கொள்ளளவான 93.4 அடிக்கு நீரைச் சேமிக்க முடியாதென்றும், அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும்போது அணையில் 74 அடி மட்டுமே நீர் தேங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியின் கிளை நதியான வெட்டாறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி ஆற்றின் வடிகாலில் ஒரு கதவணையை அமைப்பதன் மூலம் கீவளூர் பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் 25,000 ஏக்கரில் கோடைப் பயிர் செய்ய முடியும் என்றொரு யோசனையை விவசாயத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை பலர் இடத்தில் சொல்லிய பிறகும், அந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யக்கூட மறுக்கிறது, தமிழக அரசு எனக் குற்றஞ்சுமத்துகிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைப்பதன் மூலம், 10 டி.எம்.சி. தண்ணீரைப் பெற முடியும் எனக் கூறுகிறது, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையினர் வெளியிட்டுள்ள கையேடு.
இயற்கையின் வழியாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்க மறுப்பதில் மட்டுமல்ல, காவிரியின் நீர்வழித் தடங்களைப் பராமரிப்பதிலும் தமிழக அரசு பெரும் கிரிமினல் குற்றத்தையே இழைத்து வருகிறது. அதிலொன்று மணல் கொள்ளை. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடுகிறது என்றால், இன்னொருபுறம் ஆற்றில் நீர் ஓடுவதைத் தடுத்துக் குட்டை போலாக்கி, எதற்கும் பலன் இல்லாமல் வீணடிக்கிறது.
காவிரி – கட்டளைக் கால்வாயின் அவலமான நிலை.
“காவிரி நீர் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டால் போதும் என்ற நிலையில், மணல் கொள்ளையால் ஆற்றின் வழித்தடம் பள்ளமும் மேடுமாகித் தண்ணீர் செல்வது தடைப்பட்டுப் போவதால், 10,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டிய நிலையில் பொதுப்பணித் துறை உள்ளது. இந்த வேறுபாடு – வினாடிக்கு 3,000 கன அடி நீர் – எதற்கும் பயன்படாமல் வீணாகிறது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி.
மணல் கொள்ளைக்கு அடுத்து காவிரியின் நீர்வழித் தடங்களைத் தூர் வாருவது என்ற பெயரில் நடந்து வரும் ஊழல். “ஐந்து இலட்ச ரூபாய்க்குள் இருக்கும் தூர் வாரும் வேலைகளை உள்ளூர் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேலே இருக்கும் வேலைகள் அமைச்சரின் மச்சான், மாமன் – என உறவு முறைகளை வைத்து அமைச்சரின் குடும்பமே எடுத்துக் கொள்கிறது. காண்டிராக்டு எடுப்பதில் இப்படியான தில்லுமுல்லு என்றால், தூர் வாரும் வேலையோ கண் துடைப்பாகவே நடைபெறுகிறது. பத்து இலட்ச ரூபாய் வேலையில், ஒண்ணரை இலட்ச ரூபாய் பொக்லைன் மிஷினுக்கு, ஒரு இலட்ச ரூபாய் ஆபீசுக்கு, மீதியெல்லாம் காண்டிராக்டு எடுத்திருக்கும் கும்பல் சுருட்டிவிடும். எங்கள் ஊரில் இப்படித்தான் நடந்தது. நாங்கள் பொக்லைன் டிரைவருக்கும், மேனேஜருக்கும் சோறு கொடுத்து, படிக்காசும் கொடுத்து மேலும் இரண்டு கிலோ மீட்டர் வெட்டினோம்” என்கிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
இது மட்டுமல்ல, எப்போது தூர் வார வாருவார்கள் எனக் கிராம மக்களுக்கே தெரியாது. தண்ணீர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ராத்திரியோடு ராத்திரியாக வந்து வெட்டிவிட்டுப் போவார்கள். தாலுகா ஆபிஸில் இரண்டு பொக்லைன் மிஷின் இருந்தால், விவசாயிகளே டீசல் போட்டு உருப்படியாக வெட்டிவிடுவோம் என்கிறார், அவர்.
“நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் தூர்வாரும் பணிகள் “பேட்ச் ஓர்க்” பார்ப்பது போல நடைபெறும். வாய்க்கால்களை முறையாகத் தூர் வாருவது பற்றி அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இப்பொழுதெல்லாம் குடியானவர்களும் அக்கறை கொள்வதில்லை” என்கிறார், வேளாண் துறையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி.
நீர் வழித்தடங்களைப் புதர்ச் செடிகள் அண்டாமல், மணல் திட்டுகள் உருவாகாமல் முறையாகப் பராமரிப்பது, நீர் தடையின்றி ஓடுவதற்கு அவசியமானது என்ற பொதுப் புரிதல் அனைவருக்கும் இருக்கும் என்ற போதும், காவிரி டெல்டாவைப் பொருத்தவரை இந்தப் பராமரிப்புப் பணி இன்னும் கூடுதலாகக் கவனம் கொடுத்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
வெட்டாறு கடலில் கலக்கும் இடமருகே ஒரு கதவணையை அமைக்கக் கோரி வரும் நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடி, கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களின் எண்ணிக்கை 25,228. இந்த வாய்க்கால்கள், ஏ வகுப்பு, பி வகுப்பு எனத் தொடங்கி ஜி வகுப்பு என ஏழு விதமாகப் பிரிக்கப்பட்டு, 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்லுகின்றன. (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி கையேடு, 2016-2017, பக்.12)
டெல்டா பகுதி முழுவதுமே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமையாத பூகோள காரணத்தால், அதாவது, 2,000 அடிக்கு ஒரு அடிவீதம் உயர்ந்து கிட்டதட்ட சமநிலையில் உள்ளதால்,  காவிரி, அதன் துணை நதிகள், வாய்க்கால்களில் ஓடும் நீர் மெதுவாகவே கடலை நோக்கிப் பாய்கிறது. இந்தப் புவியியல் காரணம், ஆற்று வழித் தடங்களையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினாலும், தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகவே அலட்சியமாகவே நடந்து வருகிறது. அதுவும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிலைமை படுமோசம் என்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.
இந்த அலட்சியம் இரண்டு விதங்களில் விவசாயத்தை, விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கிறது. ஒருபுறம், தண்ணீர்ப் பற்றாக்குறை காலங்களில் நீர் சீராகப் பாய்வதற்கு ஏற்படும் தடைகளால் தண்ணீர் வீணாகிறது. பெருமழைக் காலங்களிலோ வாய்க்கால்கள் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டு, வயல்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்துகிறது. 2015-இல் வெள்ளத்தினால் டெல்டா மற்றும் கடலூர் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய்.
“டெல்டா பகுதியிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாததால், அதன் மொத்த கொள்ளளவில் 60 முதல் 65  சதவீத நீரை மட்டுமே எடுத்துச் செல்லும் அளவிற்குத் திறன் குறைந்து போயுள்ளன. இந்தத் திறனை 80 முதல் 85 சதவீதமாக அதிகப்படுத்தினால், பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். இதற்கு வாய்க்கால்களை முழுமையாகச் செப்பனிட்டுப் பராமரிப்பதற்கு, ஆண்டுக்கு 200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் போதும்” என்கிறார், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி.
டெல்டா மாவட்ட வாய்க்கால்கள் மட்டுமல்ல, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலுள்ள ஏரிகளும், குளங்களும், ஆற்று வழித் தடங்களும் மணல் கொள்ளையாலும், ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து கிடப்பதை, 2015-இல் பெய்த பெருமழை அம்பலப்படுத்திக் காட்டியது. நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ள நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன பழைய கட்டுமானங்களைச் சீரழித்ததோடு மட்டுமின்றி, புதிதாக உருவாக்குவதிலும் தமிழக அரசு அக்கறையற்றுதான் நடந்து வருகிறது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். கரூர் அருகேயுள்ள மாயனூரில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையிலிருந்து ஒரு ஈர்ப்பு கால்வாயை அமைத்து, வெள்ளக் காலங்களில் காவிரியில் பாயும் நீரை இக்கால்வாயின் வழியாகக் கொண்டு சென்று, அதனைக் குண்டாற்றில் இணைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 3.37 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். இத்திட்டத்திற்கு 3,516 கோடி ரூபாய் செலவாகும் எனப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் இன்னும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
இது போல கடந்த தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட திட்டமான தாமிரபருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
காவிரியின் முக்கிய துணை ஆறான பவானி நதியில் குறுக்கே கதவணைகளே இல்லை என்பதோடு, சிறுமுகை, சத்தியமங்கலம், பவானிசகார் உள்ளிட்ட 11 இடங்களில் கதவணைகள் கட்ட மைய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை முன்வைத்த பரிந்துரைகளும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
2012-இல் அமைக்கப்பட்ட காவிரி தொழில்நுட்பக் குழு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட முன்வைத்த பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது மற்றொரு செய்தி.
ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதுபோல விவசாயத்திற்குப் பாசன வசதி அடிப்படையானது. தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
வெறும் 650 கோடி ரூபாய் முதலீட்டைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்த நோக்கியா நிறுவனத்திற்கு, அது தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் தமிழக அரசும், மைய அரசும் வாரிக்கொடுத்த பல்வேறு சலுகைகளின் மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாயாகும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரி விலக்கோ பல பத்து இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டுகிறது. இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொதுப் பணத்தை வாரிக்கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, டெல்டா வாய்க்கால்களைச் சீரமைக்க மறுக்கிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்பு, தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு உள்ளிட்டு பல்வேறு திட்டங்களை மட்டுமல்ல, உரிய இடங்களில் கதவணைகள், தடுப்பணைகளை முறையாகக் கட்டிப் பராமரிப்பதில்கூட அக்கறையற்று இருக்கிறார்கள்.
இந்தியாவெங்கிலுமே விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், விவசாயிகள் மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும் அரசுகளின், ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றபோதும், விவசாயத்தைப் புறக்கணிப்பதில் தமிழக அரசோ இன்னும் மூர்க்கமாக நடந்துவருகிறது. ஆற்று மணல், தாது மணல், கிரானைட், நிலம் (ரியல் எஸ்டேட்) ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்தான் ஆளுங்கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் நிரம்பியிருப்பதால், தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரையிலான அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்தக் கும்பலின் கையாளாக இருப்பதால், தமிழக விவசாயத்தின் அழிவை இந்தக் கும்பல் நாலுகால் பாய்ச்சலில் துரிதப்படுத்துகிறது. விவசாயத்திற்கு ஆதாரமான நீர் ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் தூர்வாரிப் பராமரிப்பதற்கு 3,400 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.
  • செல்வம்
    புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக