வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழக சிறைக்கு சசிகலா மாற்றம் ?

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தையடுத்து, கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு போதிய பாதுகாப்பின்மை காரணமாக, தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடலாமா என்று சசிகலா தரப்பினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை காரணமாக சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கருதிய நீதிபதிகள், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதியின் முன் சரணடைய உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைந்தனர். அதன் பின்னர், அவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் மாலை 6.20 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா, இளவரசி வருவதற்கு முன்னதாக நீதிபதி அஷ்வந்த் நாராயணா அமர்ந்திருந்த அறையின் அருகே சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுக எம்.பி தம்பிதுரை ஆகியோர் காத்திருந்தனர்.
முன்னதாக, சுதாகரன் சார்பில் உடல்நிலை சரியில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இன்னும் சற்று நேரத்தில் அவர் சரண் அடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, சுதாகரன் நீதிபதியின் முன் சரணடைந்தார்.
இந்நிலையில், சசிகலாவின் உடைகளை கொண்டு சென்ற காரின் மீது பர்ப்பன அகரஹாரா சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கர்நாடக போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தையொட்டி, சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இருக்குமா என்று சசிகலா தரப்பினருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதையடுத்து, கர்நாடக சிறைச்சாலைக்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யலாமா என்று சட்ட நிபுணர்களுடன் சசிகலாத் தரப்பினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக