செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

திரையரங்குகளில் தேசிய கீதம் .. எழுந்து நிற்க வேண்டியது கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றம் !


திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டியது கட்டாயம் இல்லை என, இன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதால், கடந்த நவம்பர் 30ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும்முன்பும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு தேசிய கீதம் இசைக்கப்படும்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். திரையில் தேசியக் கொடியை காட்ட வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்பதற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும் விரும்பத்தகாத பொருள்களின் அட்டைகளில் தேசியகீத வரிகள் அச்சிடப்படுவதை தடுக்க வேண்டும். தேசிய கீதத்தைப் பயன்படுத்தி, வர்த்தகரீதியில் ஆதாயம் தேடக் கூடாது. இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, நாடு முழுவதும் பல வன்முறைச் சம்பவங்களுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டாலும் எழுந்து நிற்க வேண்டுமா’ என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, நீத்பதிகள் ‘திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்கவேண்டியது கட்டாயமில்லை’ என தீர்ப்பளித்தனர்.
கடந்த வாரம், ‘ஜன கண மன’ பாடல் தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் எனல் கோரி, சமூக ஆர்வலர் ஹரிந்தர் திங்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ‘தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாதவர்களை தண்டிப்பதற்குமுன், அந்தப் பாடல் குறித்த வரலாற்று உண்மைகள், பெருமைகளை மக்கள் அறியச் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக