செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு போராட்ட குழுவுக்கும் புதிய அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை !


'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவால், பெரிய அளவிலான போராட்டமாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதிக்காமல், அமைதி வழியில் போராட்டம் நடந்ததால், பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

போராட்டத்தின் பலனாக, ஜல்லிக்கட்டு நடத்த, மாநில அரசு தனி சட்டம் இயற்றியது. மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, மெரினா போராட்டம் சான்றாக அமைந்தது.

இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்' எனக்கூறி, 'என் தேசம் என் உரிமை' என்ற பெயரில், சிலர் புதிய அரசியல் கட்சியை துவக்கி உள்ளனர். இது, ஜல்லிக்கட்டு
போராட்டத்தில் துவக்கம் முதல் உண்மையாக பங்கெடுத்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி எழுப்பினேன்


இது குறித்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துவக்கம் முதல் பங்கேற்றதுடன், அமைச்சர்கள் உடன் பேச்சு நடத்திய, 'டிவி, ரேடியோ' தொகுப்பாளரும், சினிமா பின்னணி குரல் கலைஞருமான விலாசினிகூறியதாவது:
மெரினா போராட்டத்தின் போது, துவக்கத்தில் அனைவரும், ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே குரல் கொடுத்தனர். சிலர், 'முதல்வர் பன்னீர்செல்வத்தை வரச்சொல்' என்றனர். அதற்கு, 'போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஒரு அறிக்கை விடுத்தால் மட்டும் போதுமானது; இந்த இடத்துக்கு, முதல்வர் எப்படி வர முடியும். வந்தால், அவரின் பாதுகாப்பு என்னவாகும்' என, நான் கேள்வி எழுப்பினேன். அப்போது, சிலர் என் மீது கோபப்பட்டனர்.
மெரினா போராட்டம் யாருடைய தலைமையும் இல்லாமல், இளைஞர்களின் தன்னெழுச்சியால் நடந்தது. அதனால் தான், அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது, சிலர் அதை பயன்படுத்தி, அரசியல் கட்சி துவக்கி உள்ளனர்.

புதிய அரசியல் கட்சியின், ஒருங்கிணைப் பாளராக உள்ள எபினேசர் என்பவரை, மெரினாவில் போராட்டம் துவங்கி, மூன்று நாட்கள் கழித்து தான் பார்த்தோம்; மற்றவர்கள் யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. ஜல்லிக்கட்டை பயன்படுத்தி, அரசியல் கட்சி துவக்கி இருப்பது, மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போல< உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல, மெரினா போராட்டத்தில் துவக்கம் முதல் பங்கேற்ற, கணபதி கவுசிக் கூறியதாவது:போராட்டத்தின் போது பேசிய மாணவர்கள், இளைஞர்கள், 'பிரச்னைக்காக ஒன்றிணைந்து போராடுவோம்; அரசியலில் ஈடுபட மாட்டோம்' என்றனர். ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாக கூறி, சிலர் அரசியல் கட்சி துவக்கியுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள், இளைஞர்கள், மக்களின் பலம் என்ன என்பதை, மெரினா போராட்டம் மூலம், அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசியல் கட்சி துவக்கி தான், அதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சி துவங்கும் எண்ணம் எதுவும், உண்மையான போராட்டக் குழுவினரிடம் இல்லை. மாணவர்களின் தியாகத்தை, சிலர் கொச்சைப்படுத்தி விட்டனர். அவர்களை இளைஞர்களும், மாணவர்களும் புறக்கணிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

சந்தேகம் உள்ளது


போராட்டத்தில் பங்கேற்ற சரவணன் கூறியதாவது:கட்சி துவக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. புதிய கட்சி துவக்கி உள்ளோரின் பின்னணி குறித்து சந்தேகம் உள்ளது. அவர்களை யாரோ, சுய லாபத்துக்காக இயக்குகின்றனர். விபரம் தெரியாமல், அவர்களும் அவர்கள் சொல்படி ஆடுகின்றனர்.மெரினாவில், உண்மையாக நடந்த போராட்டத்தில், கடைசியில் சில விஷமிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர். அவர்கள் தான், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணியில் இருக்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதை உணர வேண்டும்.
இவ்வாறு சரவணன் கூறினார். - நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக