வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

நெல்லையில் போலீஸ் ஜீப்பிலேயே கைதி வெட்டி கொலை

நெல்லை: நெல்லையில் போலீஸ் ஜீப்பை மறித்து கைதியை  காரில் வந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது. இதனை தடுக்க முயன்ற எஸ்ஐ உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளியைச் சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (47). அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது கடந்த 11.1.2009ல் சுத்தமல்லியில் நடந்த பிரபல ரவுடி மதன் உள்ளிட்ட 3 பேர் கொலை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் நடந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்காரத்தை, முறப்பநாடு சரகத்தில் நடந்த கொலை வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஆயுதப்படை எஸ்ஐ வீரபாகு மற்றும் 3 போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை போலீஸ் ஜீப்பில் அழைத்து வந்தனர்.



பாளையங்கோட்டை கேடிசி நகர் செக்போஸ்ட் அருகே வரும் போது திடீரென்று காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அதனை குறுக்கே நிறுத்தி போலீஸ் ஜீப்பை மறித்தனர். அதன்பிறகு காரில் இருந்து இறங்கிய அவர்கள், போலீசார் சுதாகரிப்பதற்குள் அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்து ஆயுதங்களை எடுத்து வந்து சரமாரியாக வெட்டினர். இதில் சிங்காரம் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எஸ்ஐ வீரபாகு உள்ளிட்ட 2 போலீசாருக்கும் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அந்த கும்பல் போலீஸ் ஜீப்பை அடித்து நொறுக்கி விட்டு அதே காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்து மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த சிங்காரம் உள்ளிட்ட 4 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிங்காரம், தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்தார். பட்டப்பகலில் சினிமா போன்று நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காரில் தப்பிச்சென்றவர்களை பிடிக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து செக்போஸ்ட்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.   தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக