செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சுப்பிரமணியன் சுவாமி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு .., சிதம்பரம் மற்றும் கார்த்தி

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்தான் முக்கியக் குற்றவாளிகள் என்று, பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல்வாதி குறித்து சில தகவல்களை வெளியிடவிருப்பதாக சுவாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர் நடத்திவரும் நிறுவனங்கள், 21 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றன. இதுகுறித்த தகவல்களை அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுவரை தெரிவித்தது இல்லை.
மொனாகோவில் உள்ள பர்கலேஸ் வங்கி, பிரிட்டனில் உள்ள மெட்ரோ வங்கி, சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, சிங்கப்பூரில் உள்ள ஓ.சி.பி.சி., வங்கி, பிரிட்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி., வங்கி, பிரான்சில் உள்ள டாய்சி வங்கி, ஸ்விஸ் நாட்டில் உள்ள யு.பி.எஸ்., வங்கி, கலிபோர்னியாவில் உள்ளள வெலஸ் பார்கோ வங்கி ஆகிய வங்கிகளில், இந்தக் கணக்குகள் உள்ளன.

ஆனால் கடந்த எட்டு மாதங்களாக, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் இந்த விஷயம் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய நிதித்துறையில் உள்ள சிதம்பரத்தின் நண்பர்கள் அளிக்கும் நெருக்கடியே, நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம். சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்தான், இந்த வங்கிக் கணக்கு விவரங்களை கடந்த வாரம் என்னிடம் அளித்தார். சென்னை மற்றும் டில்லியில் இருக்கும் ஊழல் மையங்கள் ஏற்படுத்திவரும் கடுமையான நெருக்கடிகளையும் அவர் எடுத்துக் கூறினார்.
பிரிட்டனில் உள்ள மெட்ரோ வங்கியில், 16714313 என்ற வங்கிக் கணக்குதான் கார்த்தி சிதம்பரத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு. ஆனால் வருமான வரித்துறையிடம், ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படும் கணக்கில், இந்த வங்கிக் கணக்கு இடம் பெறவில்லை. இந்த வங்கிக் கணக்கை ரகசியமாக பல ஆண்டுகளாக அவர் நடத்திவருகிறார்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் காங்., வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்து விவரங்களில், இந்த வங்கிக் கணக்கு விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம்மீது, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில, பாஜக தலைவர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகவைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்’ இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக