புதன், 22 பிப்ரவரி, 2017

சசிகலாவிற்காக சிறையாக மாறும் ஜெயலலிதா இல்லம்? வேதா நிலையத்தை சிறை வளாகம் ..

தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவகமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் சசிகலாவிற்காக போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை சிறையாக மாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்ற செய்தியை அறிந்து நாம் அதிர்ந்து போனோம். இந்த தகவலின் பின்னணியையும் அதற்கான சாத்தியங்களையும் நாம் விரிவாக பார்க்கலாம்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் நேற்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தார். அப்போது அவரோடு சில முக்கிய வழக்கறிஞர்களும் சென்றிருக்கிறார்கள். இந்த பயணத்தின் நோக்கம் சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவது. அதற்கான அத்தனை முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது. இதற்காக சிறை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆச்சார்யா கருத்து !
இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தரப்புக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவருமான, ஆர்.பி.ஆச்சார்யா கருத்து தெரிவிக்கையில், ஒரு சிறையில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகம் முடிவு செய்யலாம். ஆனால் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரையில் தண்டனையை பெங்களூர் தனி நீதிமன்றம் பிறப்பித்திருந்தாலும் அதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. எனவே சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அவர் சென்னை சிறைக்கு மாற்ற அனுமதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் கண்ணதாசன் மறுப்பு

எனில் எந்த நம்பிக்கையில் சசிகலா தரப்பு சிறைமாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள சிறை விவகாரங்களின் மிகுந்த அனுபவம் பெற்ற வழக்கறிஞர் கண்ணதாசன்அவர்களை தொடர்பு கொண்டு ஆச்சார்யாவின் கருத்து குறித்து கேட்டோம். மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவின் கருத்தை அடியோடு மறுத்தார் அவர். இது குறித்து அவர் அளித்த விளக்கம் இதோ : சிறைகள் சட்டம் 1894 உட்பிரிவு 3 என்ன கூறுகிறது என்றால், ஒரு மாநில அரசிற்கு எந்த இடத்தை வேண்டுமானாலும் சிறையாக மாற்றியமைக்கும் அதிகாரம் உண்டு. ஆகவே சசிகலா சிறை மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறுவதற்கு எதுவும் இல்லை. இது இருமாநிலங்கள் சார்ந்த பிரச்சனை. தமிழக அரசும் கர்நாடக அரசும் முடிவு செய்தால் சசிகலாவை எங்கு வேண்டுமானாலும் சிறை மாற்றம் செய்யலாம். இதில் நீதிமன்றம் தலையிட வழியில்லை. ஒரு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர் மாநில அரசின் அதிகாரத்திற்கு கீழ் வந்துவிடுகிறார். எனவே சசிகலாவை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே தமிழக அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தையே சிறையாக மாற்ற தேவையான அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் உதவியோடு வெகுவிரைவில் சசிகலா போயஸ் தோட்டத்திற்கு திரும்ப அனேக வாய்ப்புகள் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன” என்று கூறினார்.
முன் உதாரணங்கள்
அரசு மனது வைத்தால் எந்த இடத்தையும் சிறையாக மாற்ற முடியும் என்பதற்கு சில உதாரணங்கள் உள்ளன. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, இந்திரா பிரதமராக இருந்த போது அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக செயல்பட்டார். இதனால் பரூக் அப்துல்லாவை இந்திரா அரசு கொடைக்கானலில் உள்ள ஒரு இல்லத்தில் சிறை வைத்தது. இது அரசியல் ரீதியான சிறந்த உதாரணம். வேறொரு வகையில் இதற்கு உதாரணம் கூற முடியும். சந்தன கடத்தல் வீரப்பன், கருணாநிதி ஆட்சியில் சரணடைய தயாராக இருந்தார். அப்போது, வீரப்பன் முன் வைத்த ஒரே கோரிக்கை, என்னை சிறைக்கு அனுப்பக் கூடாது என்பதுதான். இதனால் வீரப்பனுக்காக மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒரு இல்லத்தை சிறையாக மாற்ற ஏற்பாடு நடந்தது. ஆனால் மூத்த வழக்கறிஞர்கள் சிலர், “வீரப்பனை தற்போது வேண்டுமானால் வீட்டுச் சிறையில் வைக்கலாம். வழக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிமன்ற தீர்ப்பின் படி அவரை சிறைக்கு அனுப்பிதானே ஆகவேண்டும். எனவே இந்த முயற்சி வேண்டாம்” என்று கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் வீரப்பனுக்கு தனிச் சிறை அமைக்கும் ஏற்பாட்டை கைவிட்டிருக்கிறார் கருணாநிதி.
எனவே ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை சிறையாக மாற்றுவது தமிழக அரசிற்கு பெரிதான காரியம் அல்ல. சசிகலாவை தலைவியாக கொண்டாடும் தமிழக அரசு இந்தச் செயலை சிரமேற்கொண்டு செய்யும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கு முன் தமிழக அரசு எண்ணத்தில் கொள்ள சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதை சுட்டிக் காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
வேதா இல்லம் உருவான கதை!
ஜெயலலிதாவின் தாய் சந்தியா என்ற வேதவல்லி அரும்பாடுபட்டு வாங்கியதுதான் தற்போது சசிகலா வசம் இருக்கும் போயஸ் தோட்ட இல்லம். ஒரு நடிகையாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை கொண்டு போயஸ் தோட்டத்தில் ஒரு இடத்தை வாங்க முடிவு செய்திருக்கிறார் சந்தியா. இதையறிந்த எம்.ஜி.ஆர் அந்த இடம் வாஸ்த்து பிரகாரம் சரியில்லை என்று அதை நிராகரித்து இருக்கிறார். அதன் பின் எம்.ஜி.ஆரே போயஸ் தோட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்திருக்கிறார். அந்த இடத்தில் ஜெயலலிதா தன் தாய் பெயரில் வேதா இல்லத்தை கட்டினார். வேதா இல்லத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் ஜெயலலிதாவின் தாய் சந்தியாவிற்கு பரிச்சயமானது என்று சொல்வோர்கள் உண்டு. அந்த அளவிற்கு அந்த இல்லம் எழும்புவதை அருகில் இருந்து தவம் போல் கவனித்து வந்திருக்கிறார் சந்தியா. ஆனால் வேதா இல்ல கிரஹபிரவேசத்திற்கு சந்தியா உயிரோடு இல்லை என்பது மிகவும் சோகமான கதை. ஒரு தாயின் கனவு இல்லத்தை சிறையாக மாற்றுவது நியாயம்தானா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இதைவிட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

மக்கள் வெறுப்பு
இன்று தமிழக மக்கள் அத்தனை பெரும், (122 அதிமுக எம்எல்ஏக்களை தவிர) சசிகலாவிற்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மரணம், முதலமைச்சராக சசிகலா துடித்த துடிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உச்சநீதிமன்றம் சசிகலாவிற்கு வழங்கிய தண்டனை இவையாவும் சசிகலா மீது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சில நேரங்களில் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தார் போல் தீர்ப்பு அளிப்பது வழக்கம். நீதிமன்றங்கள் இது போன்ற தருணங்களில் மக்களின் எண்ணங்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதில்லை. ஆகவே சசிகலாவிற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை சிறையாக மாற்றுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றே நம்புவோம். நீதிமன்றம் இதில் தலையிடாத பட்சத்தில் தமிழக அரசு வேதா இல்லத்தை சிறையாக மாற்ற முயற்சித்தால் அது சசிகலாவை மகிழ்ச்சி படுத்தலாம். ஆனால் தமிழக மக்கள் இந்த அரசை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அப்படியொரு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டால் தமிழக மக்களின் ஏகோபித்த வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக