வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

உன்னை யார் என்று நீ அறியமுடியாதவாறு உன்னை அடக்கி வைத்திருப்பது யார்?

பண்பாடு, வாழ்வியல், உணவு, வாழ்க்கை சார் கலாசாரம், இசை என இவையெல்லாமே தலையோங்கி, உழைக்கும் வர்கம் என்றுமே அதன் மீது பெருமிதம் கொள்ள கூடாது, அவர்களது அருமை அவர்களுக்கு விளங்க கூடாது என திட்டமிட்டு, தன் திறமையை, தொழிலை, உணவை, பண்பாட்டை, மிகைப்படுத்தப்படாத கலாசாரத்தை இழிவாக்கி, அடிமையாக்கி, பிரித்தாண்டு, இம்மக்களுக்கு புலப்படாத ஒன்றை அறிமுகப்படுத்தி அதை அவர்களுக்கு கிடைக்க விடாமலும் செய்து, ஒரு கீழ் நிலையிலேயே............

வாசுகி பாஸ்கர்: காட்சி 1 : சென்னையின் பரோட்டா கடை முதலாளிகள் ஊரில் இருந்து வரும் போதே சிறுவர்களை கடை வேலைக்கு பிடித்து கொண்டு வந்து விடுவார்கள், காலை பதினொன்று, பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை, இரவு பாத்திரத்தை கழுவி விட்டு படுப்பதற்குள், ஒன்று இரண்டு ஆகி விடும். இந்த சிறுவர்களின் வேகம் அசாத்தியமானது, களங்கமற்றது, சொல்லி முடித்த நேரத்தில் கேட்ட உணவு இலையில் கிடக்கும். வயது, சுறுசுறுப்பு, நெல்லை மதுரை பாஷை, படிக்கும் வயதில் சம்பாதிக்கிறார்களே என்கிற எமோஷன் என எல்லாமும் ஒன்றாக சேர்ந்து நமக்கு பொதுவாகவே அவர்கள் மீது கொஞ்சம் ஈர்ப்பு ஏற்படும், நல்ல டிப்ஸும் வாங்குவார்கள். ஆனால், நீங்கள் கவனித்தால், அதே கடையில் வேலை செய்யும் பெரியவர்கள், இந்த சிறுவர்களை மட்டம் தட்டி கொண்டே இருப்பதை பார்க்கலாம், சின்ன தவறுக்கும் ஓவராக ரியாக்ட் செய்வார்கள், தவறுகள் நடக்காத கிரகத்தில் இருந்து வந்தவர்களாய் இருப்பர், முதலாளியிடம் சிறுவர்கள் வாங்கி இருக்கும் நற் பெயரையும் களங்க படுத்தும் வேலையையும் அவ்வப்போது செய்வர்.
பத்து இருபது என்று டிப்ஸ் வாங்கும் போது, கண்டு கொள்ளாதது போல, கண்டு கொண்டே கடப்பார்கள். இந்த பெரியவர்களின் உளவியல் என்னவென்றால், களங்கமில்லா இந்த உழைப்பை பெரும்பாலும் இவர்களால் தர முடியாது, "தான் ஏன் இவ்வளவு உழைக்க வேண்டும்?" என்கிற தர்க்க வயசுக்கு வளர்ந்திருப்பர், செய்ய முடிந்தாலும் "ஏன்?" என்கிற கேள்வியால் இவர்கள் கொஞ்சம் அளந்து தான் வேலை செய்வார்கள், இவர்களை விட அதிகமாக வேலை செய்தாலும், ஒரு போதும் அவர்களது efficiency யை அந்த சிறுவர்கள் உணர்ந்து விட கூடாது என்று தான் இவ்வாரெல்லாம் நடந்து கொள்வார்கள்.
காட்சி 2 :
முறை மாமன் படத்தில் வீட்டில் மனோரமா, குஷ்பூவிடம் கோபித்து கொள்ளும் ஜெயராமனும், கவுண்டமணியும், நாங்களே சமைத்து கொள்கிறோம் என சமைப்பார்கள், சமையல் வேலை முடியும், குளித்து விட்டு வந்து ஒரு வெட்டு வெட்டிடுவோம் என்று அவர்கள் போய் விட்டு வரும் அந்த இடைவேளையில், மனோரமாவும் குஷ்பூவும், சமயற்கட்டுக்குள் புகுவார்கள், மனோரமா அந்த உணவை ருசி பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டு அதில் உப்பையும், மிளகாய்ப்பொடியையும் எடுத்து, அந்த குழம்புக்குள் தூவி விடுவார், குஷ்பூ "பாவம், விட்டுடுங்க"ன்னு சொல்ல, மனோரமா சொல்கிற பதில் "இவனுங்களை எல்லாம் இப்படி விட கூடாது, சமையல் இவ்ளோ நல்லா வந்து இருக்கிறது தெரிஞ்சா ரொம்ப திமிரா ஆகிடும், நம்ம கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள்" என்பார்
இப்போ, காட்சி ஒன்றையும், இரண்டையும் இணைத்து பாருங்கள், உழைத்து சம்பாதிக்கும் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டே ஒரு கூட்டம் எப்படி சிறுவர்களை அவர்களின் திறமைகளை உணர விடாமல் செய்ததோ, தான் சமைக்கும் திறமையை ஒருவன் உணர்ந்து விட கூடாது என எதற்காக செய்தார்களோ, அது தான் நமது தேசத்தில் தங்கள் பண்பாடு, வாழ்வியல், உணவு, வாழ்க்கை சார் கலாசாரம், இசை என இவையெல்லாமே தலையோங்கி, உழைக்கும் வர்கம் என்றுமே அதன் மீது பெருமிதம் கொள்ள கூடாது, அவர்களது அருமை அவர்களுக்கு விளங்க கூடாது என திட்டமிட்டு, தன் திறமையை, தொழிலை, உணவை, பண்பாட்டை, மிகைப்படுத்தப்படாத கலாசாரத்தை இழிவாக்கி, அடிமையாக்கி, பிரித்தாண்டு, இம்மக்களுக்கு புலப்படாத ஒன்றை அறிமுகப்படுத்தி அதை அவர்களுக்கு கிடைக்க விடாமலும் செய்து, ஒரு கீழ் நிலையிலேயே வைத்திருந்த நாடு தான் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா. முகநூல் பதிவு வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக