செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ஆச்சார்யா அதிரடி! 32 கம்பெனிகளில், பெரும்பாலான கம்பெனிகளில் சசிகலா பங்குதாரர்.

சிகலா, அ.தி.மு.க-வின்
சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வாகி முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்ந்த நிலையில், ‘அடுத்த வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும்’ என அறிவித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை மையமாக வைத்து, ‘இதில் தீர்ப்பு தரும் வரை, சசிகலா பதவியேற்கத் தடை விதிக்க வேண்டும்’ என பலத்தக் குரல் எழுந்துவருகிறது. இந்தச் சூழலில், கர்நாடக அரசு வழக்கறிஞராக இருந்து இந்த வழக்கில் வாதாடி முடித்திருக்கும் பி.வி.ஆச்சார்யாவை பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாம் நபராகக் குற்றம்சாட்டப்பட்ட சசிகலாவின் பங்கு என்ன?’’
‘‘சசிகலாவுக்குப் பெரிய ரோல் இருக்கிறது. வழக்கில் சம்பந்தமுள்ள 32 கம்பெனிகளில், பெரும்பாலான கம்பெனிகளில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். இந்த நிறுவனங்களின் மூலம் வரும் வருமானத்தை எந்த வங்கிக் கணக்கில் போட வேண்டும், எப்போது போட வேண்டும் என்று வழிகாட்டியவர் சசிகலாதான். புதிய சொத்துகளை வாங்கும்போது ‘எந்த நிறுவனத்தின் பெயரில் வாங்க வேண்டும்’ என்றும், ‘அதையெல்லாம் எப்படிப் பதிவுசெய்ய வேண்டும்’ என்றும் ஜெயலலிதாவுக்குப் பரிந்துரை செய்ததும் சசிகலாதான்.

‘ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டுச் சதி செய்து தனித் தனியாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்’ என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

‘ஊழல் தடுப்புச் சட்டம் அரசு ஊழியர்களுக்குத் தான்’ என்று இருந்தாலும், அரசு ஊழியரான ஜெயலலிதாவைக் குற்றம் செய்யத் தூண்டிய வர்களாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் சசிகலாவின் மீது, குற்றம்செய்யத் தூண்டுதல், குற்றத்துக்கான கூட்டுச்சதி செய்தல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.’’

‘‘ஜெயலலிதாவின் மரணம், தீர்ப்பை பாதிக்குமா?’’
‘‘நிச்சயம் பாதிக்காது. முதல்கட்ட விசாரணை நடந்தபோது, ஜெயலலிதா உயிரிழந்திருந்தால் வழக்கில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், இறுதி விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகத் தள்ளிவைத்திருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் உயிரிழப்பு என்பது வழக்கின் தீர்ப்பை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருவேளை மீண்டும் விசாரணைக்கு வந்தால்கூட, கூட்டுச்சதியில் தனித் தனியாகக் குற்றம்செய்தவர்கள் என்பதால் இந்த மூன்று பேரும் தனித் தனியாக விசாரிக்கப் படுவார்கள்.’’

‘‘தீர்ப்பு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?’’
‘‘இந்த வழக்கின் வழக்கறிஞர் என்ற முறையில், நீதிமன்றத் தீர்ப்பு பற்றி நான் எந்தக் கருத்தும் கூற முடியாது. ஆனால், ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் அவர்களுடைய வழக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.’’

‘‘ஜெயலலிதா சொல்லித்தான் செய்தோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இப்போது சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சொல்லித் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘இது புதிய வழக்கு அல்ல. பல ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு. எல்லா விசாரணையும் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் முடிந்த பிறகு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்புவரும் நிலையில், சசிகலா, சுதாகரன், இளவரசி யாரும் மாற்றிப் பேச முடியாது.’’

‘‘தீர்ப்பு வருவதற்கு முன் தமிழக முதல்வர் பதவியை சசிகலா ஏற்றுக்கொள்வது சரியா?’’
‘‘சட்டப்படி இன்று அவர் முதல்வர் ஆவதற்குத் தடையில்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் தண்டனைப் பெற்றால் மீண்டும் மாற்றம் வரும். அதனால், தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும். ஏன் அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒருநாள் தண்டனை விதிக்கப்பட்டாலும் முதல்வர் பதவியில் இருக்க முடியாது. தேர்தலிலும் போட்டியிட முடியாது. மற்ற சட்டங்களின் கீழ் இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் முதல்வராக ஆக முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாது.’’

‘‘நீங்கள் கர்நாடக அரசு அட்வகேட் ஜெனரலாக இருந்ததால் கேட்கிறோம். சசிகலா பதவி ஏற்பு விஷயத்தில் தமிழக கவர்னர் எப்படி செயல்பட வேண்டும்?’’
‘‘சசிகலா பதவியேற்க முடியாமல் காலம் தாழ்த்துவதும், அவருடைய விருப்பத்தின்படி உடனடியாக பதவி ஏற்கச் செய்வதும் ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் கவர்னரின் முடிவு. இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைக் கூற முடியாது.’’

‘‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணை விரைவில் முடிந்தது. ஆனால், தீர்ப்பு இவ்வளவு மாதங்கள் தள்ளிப் போயிருக்கிறதே?’’
‘‘காலதாமதம் பற்றி என்னிடம் கேட்கக் கூடாது. இப்போதாவது தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் செய்யக் கூடாது.’’

‘‘கடந்த ஐந்து மாதங்களாகத் தீர்ப்பு பற்றி எதுவும் பேசாமல் இருந்த நீங்கள், சசிகலா பதவி ஏற்க இருந்த சூழ்நிலையில், ‘விரைவாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்’ என மெமோ தாக்கல் செய்திருக்கிறீர்களே?’’
‘‘இது தவறான தகவல். இது அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா அறிவிக்கப்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 4-ம் தேதி கர்நாடக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கலந்துகொண்டார். அவரிடம் நான், ‘இந்த வழக்கின் தீர்ப்பு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. விரைவாகத் தீர்ப்பு வழங்க, நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்தார். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. இடையில் 5-ம் தேதி, சசிகலா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்புக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.’’

- வீ.கே.ரமேஷ், படம்: ரமேஷ் கந்தசாமி  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக