திங்கள், 20 பிப்ரவரி, 2017

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் .. வெற்றி வாகை சூடிய இலங்கை அணி

கீலாங்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை, முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஹென்ரிக்ஸ் 56 ரன்களும், மைக்கேல் கிளைஞ்சர் 43 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் புகுந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் கேப்டன் தரங்கா (4 ரன்), டிக்வெலா (14 ரன்) உள்பட 5 விக்கெட்டுகளை 40 ரன்னுக்குள் (4.3 ஓவர்) இழந்து பரிதவித்தது. இந்த சூழலில் அசெலா குணரத்னே தாக்குப்பிடித்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். அவருக்கு கபுகேதரா (32 ரன்) ஒத்துழைப்பு தந்தார்.
ஹென்ரிக்ஸ் வீசிய 19-வது ஓவரில் குணரத்னே ‘ஹாட்ரிக்’ சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உள்பட 22 ரன்கள் திரட்ட ஆட்டம் இலங்கை பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை வீசினார். இதன் முதல் பந்தில் குலசேகரா (12 ரன்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் குணரத்னே, பவுண்டரி, சிக்சர் அடிக்க அடுத்த 4 பந்துகளில் 12 ரன்கள் வந்தது. இறுதி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட குணரத்னே பந்தை பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் உறைந்து போனது. இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. குணரத்னே 84 ரன்களுடன்(46 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.

முதலாவது ஆட்டத்திலும் இதே போன்று தான் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அதிலும் குணரத்னே தான் அரைசதம் அடித்து ஹீரோவாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தனதாக்கி சாதனை படைத்தது. கடைசி ஆட்டம் அடிலெய்டில் நாளை மறுதினம் நடக்கிறது. மலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக