திங்கள், 13 பிப்ரவரி, 2017

உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல்: 67 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது


லக்னோ: உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தலை சந்திக்கிற 67 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது. புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க முடியும். எனவே இங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ஆளும் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மும்முனைப்போட்டியில் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. 7 கட்ட தேர்தலில் முதல் கட்டமாக 73 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் 63 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாவது கட்டமாக 67 தொகுதிகளில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 67 தொகுதிகளில் சுமார் 45 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
ராம்பூர் மாவட்டத்தில், 70 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள்.


இதை அரசியல் கட்சிகள் கருத்தில் கொண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 64 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 தொகுதிகளில் சமாஜ்வாடி-காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய லோக்தளம் கட்சிகள் முஸ்லிம்களையே வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளன.

67 தொகுதிகளில் மொத்தம் 721 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 15 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 36 சதவீதம் பேர் கோடீசுவர வேட்பாளர்கள்.

இந்த தேர்தலில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி திட்டங்கள், இனமோதல்கள் விவகாரம் ஆகியவை பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பிஜ்னோர், பாதான் ஆகிய 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். அவருடன் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சிக்காக அதன் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்காக சமாஜ்வாடி கட்சி தலைவரான மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தனர். அகிலேஷ் யாதவ் நேற்று ஒரே நாளில் 8 இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்த கூட்டணிக்காக அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், இந்தி நடிகை ஜெயாபச்சன் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில், மறுப்பதில் அனல் பறக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை.

முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங் தனது ராஷ்டிரீய லோக்தளம் கட்சியின் சார்பில் 40 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். அவரது மகன் ஜெயந்த் சிங்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அனல்பறக்கும் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது.

மூன்றாவது கட்டமாக 19-ந் தேதி 69 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.  maalaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக