சனி, 11 பிப்ரவரி, 2017

சசிகலா சொத்துக் குவிப்பு: மேல்முறையீடு 14-ம் தேதி தீர்ப்பு? ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன் ,இளவரசி மீதான..

மறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் 14-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1991- 96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.6 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 2015 மே 11-ம் தேதி நால்வரும் நிரபராதிகள் என விடுவித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசு, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 7-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை ஆஜராகி, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு குறித்து நினைவூட்டினார். அதற்கு நீதிபதி பினாகி சந்திரகோஷ், “இவ்வ‌ழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்படும்’’ என்றார்.
இது குறித்து உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலக வட்டார‌ங்கள் கூறியதாவது: தீர்ப்பு வெளியிடுவது தொடர்பாக முந்தைய தினம் மாலை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவிக்கப் படும். ஒருவேளை திங்கள்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றால் வெள்ளிக்கிழமை மாலை அது தொடர்பான விவரங்கள் வெளியிடப் படும். முக்கியமான வழக்காக இருந்தாலும் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தீர்ப்பு வெளியிடுவதில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கை பொறுத்தவரை இரு நீதிபதிகளும் தீர்ப்பு எழுதும் பணிகளை முடித்துவிட்டனர். நீதிபதி பினாகி சந்திர கோஷ் கூறியபடி செவ்வாய்க்கிழமையுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. எனவே செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முந்தைய நாளே வெளியாகும்
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாக உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக