வியாழன், 23 பிப்ரவரி, 2017

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

  லூதியானா மற்றும் நோய்டா, இந்தியா – கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று நள்ளிரவுக்குச் சில மணிநேரங்கள் முன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்காக தொலைக்காட்சியின் தோன்றினார். உயர்மதிப்புக் கொண்ட பணத்தாள்களான 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்பதை அவர் அறிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கும் ”கருப்புப் பணம்” அல்லது கணக்கில் வராத வருமானத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை இது என அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பான்மையாக பணப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகமோ திடீரென நின்று போனது. குறிப்பாக தினக்கூலிகளும் ஏழை இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதோ, ஏழு இந்தியர்கள் பணமதிப்பழிப்பு தொடர்பாக தங்கள் கதைகளை விவரிக்கின்றனர் – மோனிகா, இல்லத்தரசி (48 வயது) – பணமதிப்பிழப்பு எங்களை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது.
இந்தியாவின் 86 சதவீத பணத்தாள்களைத் தடை செய்யும் மோடியின் முடிவைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகத் தனது குடும்பம் அனுபவித்த துயரங்களை மோனிகாவால் மறக்க முடியவில்லை.
மொடியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டின் விளைவாக லூதியானாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் தனது கணவருக்கு தொடர்ந்து இரண்டு மாத சம்பளம் நிறுத்தப்பட்டதை வீட்டில் உள்ள ஒடுங்கிய சமையலறையில் நின்றவாறே விவரிக்கிறார் மோனிகா.
இருபத்தோரு வயதான மகளையும் பதினான்கு வயதான மகனையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. மோனிகாவின் கணவருக்குக் கிடைக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தை நம்பியிருந்த அக்குடும்பம் சில சமயங்களில் உணவுக்கே வழியின்றித் தவித்துள்ளது.
”எனது குடும்பத்தினர் பல நாட்கள் சாப்பிடாமல் உறங்கினர்” என்கிறார் அவர். ”இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களைப் பிச்சையெடுக்கும் நிலையை நோக்கித் தள்ளி விட்டது. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்கிறார் மோனிகா. ”தெருவில் இறங்கி மக்களிடம் கைநீட்டி காசு கேட்பதற்கு நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை” என சமயலறை ஜன்னலில் நிலைகுத்திய பார்வையோடு சொல்கிறார்.
அப்படியே ஒருவேளை கேட்டிருந்தாலும் கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கூட உதவும் நிலையில் இல்லை என்பதை விளக்கிய மோனிகா, “இந்தப் பகுதியில் எல்லோருமே ஏழைகள் தான். எல்லோருமே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்” என்கிறார்.
பணத்தடை மோனிகாவின் அக்கம்பக்கமாக வசிக்கும் ஏழைகளையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. தனது கணவருக்கு தற்போது தவணை முறையில் சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட மோனிகா, இப்போதும் நிலைமை சீரடையவில்லை என்கிறார். சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் பணப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட நாட்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக செல்லாக்காசாகிப் போன பழைய பணத்தாள்களை மாற்ற கோடிக்கணக்கானவர்கள் வங்கிகளின் முன் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.
ஆனால், மோனிகாவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, “நாங்கள் ஏழைகள், எங்களுக்கு வங்கிக் கணக்கெல்லாம் கிடையாது” என்கிறார். மேலும் கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களது எதிர்காலத்துக்கு எப்படி நன்மை செய்யும் எனத் தெரியாது – ஆனால், தற்போதைய வாழ்க்கையை அது கொடுங்கனவாக்கி விட்டது” என்கிறார்.
***
ஹேமலதா (தையல் தொழிலாளி, 29 வயது) – கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் காலி வயிற்றோடு உறங்கினார்களா?

லூதியானாவின் சாம்ராலா சௌக்கில் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களுக்காக அரசு நிர்மாணித்த வீடுகளின் தொகுப்பில் வசிக்கும் மோனிகாவின் கதை மட்டும் தனித்துவமானதல்ல. அதற்கு இணையான கதைகளும் அங்கே நிறைய இருக்கின்றன.
மோனிகாவின் அண்டை வீட்டைச் சேர்ந்தவர் 29 வயதான ஹேமலதா. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவரது கணவருக்கு வேலை பறிபோயிருக்கிறது. தொகுப்பு வீடுகள் கொண்ட அந்த காலனியின் மையத்தில் வேறு சில பெண்களுடன் அமர்ந்திருக்கிறார் ஹேமலதா. மிக நெருக்கமாக கட்டப்பட்ட சுமார் 30 கான்க்ரீட் வீடுகளைக் கொண்ட அந்தக் காலனியில் அவர்கள் அமர்ந்திருந்த பகுதி தான் ஓரளவுக்கு பொதுப் புழக்கத்திற்கு பயன்படும் பகுதியாகும்.
கணவரின் வேலையிழப்பைத் தொடர்ந்து வருமானம் நின்று போனதை ஈடுகட்ட பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார் ஹேமலதா.
”சால்வைகளை வெட்டிக் கொடுக்கும் இந்த வேலையை பக்கத்து வீட்டினர் தான் எனக்கு கொடுத்தனர். ஒரு சால்வையை வெட்டிக் கொடுத்தால் ஐம்பது பைசா கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 50-லிருந்து 60 சால்வைகள் வரை வெட்டிக் கொடுக்க முடியும்” என்ற ஹேமலாதாவைச் சுற்றி சால்வைகள் குவிந்திருக்க, அவரது மூன்று வயது பெண் குழந்தையும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் சம்பாதிக்கும் முப்பது ரூபாய்களை வைத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தின் மிக அடிப்படையான தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது.
”இது மிகக் குறைவான தொகை. இதை வைத்துக் கொண்டு ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது. நான் வாடகை கட்ட வேண்டும், மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணமெல்லாம் வேறு இருக்கிறது” எனச் சொல்லும் போதே அவரது குரல் உடைகிறது. “வேறு வழியில்லை. எனது கணவர் இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும்” என்கிறார் ஹேமலதா.
இத்தனை செலவுகளைத் தாண்டி பிறந்ததில் இருந்தே பல நோய்களால் அவதிப்படும் தனது இரண்டு வயது குழந்தைக்கும் அவர் மருந்துகளை வாங்க வேண்டும். “எனது மகளுக்கு தினமும் மருந்து கொடுத்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ கந்து வட்டிக்காரர்களிடமோ தான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது” என்ற ஹேமலதா, “அதையெல்லாம் எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ?” எனக் கேட்கிறார்.
இந்தியாவின் சராசரி மாதச் சம்பளமான 16,660 ரூபாயை விட ஹேமலதாவின் கணவர் பெற்று வந்த மாதச் சம்பளமான 7000 குறைவு தான் என்றாலும், நால்வர் கொண்ட அந்த குடும்பத்தை எப்படியே கரையேற்றி வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவருக்கு வேறு வேலையும் கிடைக்கவில்லை.
ஆயத்த ஆடைகளுக்குப் பெயர் போன லூதியானா ஒரு பெரிய தொழில் நகரம். லூதியானாவில் மட்டும் சுமார் 12,000 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அடுத்து இந்நிறுவனங்களில் சுமார் எழுபது சதவீதத்துக்கும் மேல் மூடப்பட்டு சுமார் நான்கு லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
அரசின் முடிவால் தனது கணவரின் வேலை பறிபோனதென அவர் ஆத்திரப்படுகிறார் – “அரசின் எல்லாத் திட்டங்களும் பணக்காரர்களுக்கானவை என்றே நினைக்கிறேன்; அவர்கள் ஏழைகளைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை” என்ற ஹேமலதா, ”தயவு செய்து பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் வைத்திருந்த ஒருவராவது பட்டினியோடு தூங்கினார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா” எனக் கேட்கிறார்.
தங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமெனச் சொல்லும் ஹேமலதா, “இது மாபெரும் பேரழிவு. மீண்டும் எனது வாழ்கை சீரடையும் எனத் தோன்றவில்லை” என்கிறார்.
***
ராஜ்விந்தர் சிங் (34 வயது, தொழிற்சங்கத் தலைவர் ) – இந்த நடவடிக்கை மக்களை வேலையற்றவர்களாக்கி பட்டினியிலும் நம்பிக்கையற்ற நிலைக்கும் தள்ளியிருக்கிறது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையில் பயனுள்ளது என்பது எனக்குத் தெரியாது; ஆனால், முறைசாராக் கூலித் தொழிலாளிகளுக்கு அது ஒரு மாபெரும் பேரழிவு” என்கிறார் ராஜ்விந்தர் சிங். கர்கானா மஸ்தூர் யூனியனின் (ஆலைத் தொழிலாளர் சங்கம்) தலைவர் ராஜ்விந்தர். லூதியானாவில் உள்ள அரசு தொகுப்பு வீடுகள் காலனியில் இருக்கும் ஒரு சிறிய நூலகத்தில் அமர்ந்திருந்தார் ராஜ்விந்தர்.
பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டதாக குறிப்பிடும் ராஜ்விந்தர், “அது மக்களின் வேலைகளைப் பறித்து பட்டினியிலும் நெருக்கடியிலும் தள்ளிவிட்டது” என்கிறார். மேலும் பேசும் போது, “சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு எஞ்சிய ஆலைகளில் 50 சதவீத அளவுக்கு ஆட்குறைப்பும் செய்யப்பட்டது” என்கிறார்
”எனக்குத் தெரிந்து 250 தொழிலாளர்களுடன் இயங்கி வந்த ஆலைகள் எல்லாம் இப்போது பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெறும் ஐந்து தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்ட ராஜ்விந்தர், பீகார், மேற்குவங்கம், உபி போன்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்த கூலித் தொழிலாளிகள் வேறு வழியின்றி சொந்த ஊர்களுக்கே சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
“கடந்த பல நாட்களாக வீட்டில் உணவில்லாமல் அல்லாடிய பல தொழிலாளர்களைப் பார்த்து விட்டேன் – ஏன் அவர்களுடைய குழந்தைகளும் கூட பட்டினி தான் கிடந்தார்கள்” என்ற ராஜ்விந்தர், சில ஆலை முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு செல்லாத நோட்டுகளில் சம்பளம் வழங்கியதாக குறிப்பிடுகிறார் – “அந்தக் காசை வாங்கிக் கொண்டு வங்கிகளின் முன் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதைத் தவிற ஏழைகளுக்கு வேறு வழியில்லை. இவர்கள் தினக்கூலிகளாகவும் இருப்பதால் இந்த வாய்ப்பை விட்டால் அன்றைய கூலியும் கைக்கு வராது” என்றவர் தனது கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.
தொழிலாளிகளின் துன்பதுயரங்கள் அவரையும் வெகுவாக பாதித்திருந்தது. “தொழிலாளிகளிடம் இருந்து வசூலிக்கும் சந்தாவில் இருந்து தான் எனக்கு சம்பளம் தரப்படுகின்றது. தொழிலாளியிடமே பணமில்லை என்றால், தொழிற்சங்கத்துக்கு யார் தான் சந்தா கட்டுவார்கள்?”

– தொடரும்
தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா  வினவு
100 days of demonetisation: Stories of hardship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக