புதன், 11 ஜனவரி, 2017

லண்டன் LEXUS கார் இறக்குமதி ... நடராஜன் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு

ED court refuses to relieve Natarajan from case லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து சசிகலாவின் கணவர் நடராஜனை விடுவிக்க பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் மறுத்து விட்டது. By: Mayura Akilan
சென்னை: லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கும் என பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
1994ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். நடராஜன் தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் இதை வாங்கினார். 3,000 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இந்தக் கார் பல கோடி மதிப்புடையது.

இந்தக் காரின் ஆவணங்களி்ல் அது 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்றும் குறிப்பிடப்பட்டு குறைவான வரி கட்டப்பட்டது.
சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தக் கார் 1994ல் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து பழைய கார் போல காட்டியதும் தெரிய வந்தது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து நடராஜன், தமிழரசி பப்ளி கேஷன் நிர்வாகியான ஜே.ஜே.டிவி நிர்வாகியாக இருந்த சசிகலாவின் உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், அயல்நாட்டு வர்த்தக சான்றிதழ் வழங்கிய சென்னை அபிராமிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஜரிதா சுந்தர்ராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையின்போது பவானி அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். எனவே நடராஜன், வி.என்.பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாதா ஆகிய 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு இந்த வழக்கில் நீதிபதி ரவிந்திரன் தீர்ப்பளித்தார்.
பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டதால் அவர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டு விட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில், வெளிநாட்டு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. இவற்றை ஏக காலத்தில் (இரண்டு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும்.
தண்டனை பெற்ற 4 பேரில் நடராஜன், பாஸ்கரன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகியோர் தலா ரூ. 20 ஆயிரமும், யோகேஷ் பாலகிருஷ்ணன் ரூ. 40 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும். இதைக் கட்டத் தவறினால் நடராஜன் உள்ளிட்ட 3 பேர் மேலும் மூன்று மாதமும் யோகேஷ் பாலகிருஷ்ணன் மேலும் 6 மாதமும் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்தார் நீதிபதி.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு பாஸ்கரன், நடராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடராஜன், பாஸ்கரனை விடுவிக்க பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் மறுத்து விட்டது.
பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கும் என அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தண்டனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த வாரம் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கு அந்நிய செலாவணி மோசடி செய்தது தொடர்பாக வழக்கில் 25 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக