செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது! தமிழர்களின் ஒற்றுமைக்கு வெற்றி!


மின்னம்பலம் :பொங்கல் விடுமுறையை மத்திய அரசு கட்டாய விடுப்பிலிருந்து நீக்கி விருப்ப விடுப்பாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் அறிவிப்பிற்கு கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்கள். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய அரசு பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இணைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் நல ஒருங்கிணைப்பு குழு ஆணையர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறுவதாவது, மத்திய அரசு பணியாளர்கள் ஓருங்கிணைப்பு செயற்குழு கூட்டத்தில் 14- 1-2017 -ஆம் தேதி கொண்டாட இருக்கும் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுப்பு மற்றும் விருப்ப விடுப்பு குறித்த அட்டவணை ஏற்கெனவே 23.11.2016 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இதில் திருத்தப்பட வேண்டிய தவறை திருத்துவது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, இந்தக் கூட்டத்தில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1. பொங்கல் பண்டிகை , (14.1.2017) முன்னதாக விருப்ப விடுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை தற்போது கட்டாய விடுப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2. தசரா விடுமுறை (28.9.2017) முன்னதாக கட்டாய விடுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அது விருப்ப விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக