செவ்வாய், 10 ஜனவரி, 2017

மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்துவோம்- கல்லூரி மாணவர்கள்!


மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த
அனுமதி தராவிட்டால் தடையைமீறி மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்று.
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இதைக் காண வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று சென்னை மெரினாவில் முகநூல் மூலம் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்த ஒருங்கினைப்பைக் கண்டு பல்வேறு கட்சியினரும், காவல் துறையினரும் திகைத்து போனார்கள்.

இதைத்தொடர்ந்து நெல்லை, குமரி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி சேலம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு மீதுள்ள தடைய நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாத ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை போராட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் சேலம் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையெனில் தடையை மீறி தமிழக தலைநகர் சென்னை "மெரினா பீச்சிலே ஜல்லிக்கட்டை நடத்துவோம்" என்று கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி புதுவை-திருப்பதி விரைவு ரயிலை மறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே, விலங்குகள் வதைத் தடைச்சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக