திங்கள், 23 ஜனவரி, 2017

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு பிறகு ஜல்லிக்கட்டு வரைவு தாக்கல்..

Tamilnadu assembly session start from today சென்னை: இன்று தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு வரைவு தாக்கல் செய்யப்படுகிறது.
2017ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பொதுவாக, கவர்னர் உரையாற்றும் நாளில், வேறு எந்த அலுவல் இடம் பெறாது. ஆளுநர் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை, சபாநாயகர் படிப்பார்.அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவு பெறும். பின், அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத் தொடரை நடத்துவது என, முடிவு செய்யும்.


கூட்டத்தொடர் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம் என தெரிகிறது. ஒருநாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படும். மார்ச் மாதம் 2017-18ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பிறப்பிக்கப்பட்டுள்ள, அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான சட்ட முடிவை கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 'இன்று காலை, ஆளுநர் உரை முடிந்ததும், சட்டசபை ஒத்தி வைக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு பின், மீண்டும் சட்டசபை கூடும் அப்போது, ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக