புதன், 4 ஜனவரி, 2017

ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!’ .. மன்னார்குடி கொந்தளிப்பின் பின்னணி


பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் ஆவார்’ என மன்னார்குடி உறவுகள் பேசி வந்தாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. ‘முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா என்பதைக் காட்டிலும் அவரது மௌனம்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அண்ணா தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதேநேரம், ‘ கட்சிக்கும் ஆட்சிக்கும் சின்னம்மாவே தலைமை தாங்க வேண்டும்’ என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை, அரசியல் கட்சிகள் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. ‘ ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில் ஒருவரிடமே இருக்கும் போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம்.
ஆட்சியும் கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும் செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது’ என அதிர வைத்தார் தம்பிதுரை. ஜெயலலிதா சமாதியில் மொட்டை போட்டுக் கொண்டு மூன்று அமைச்சர்கள் சசிகலாவை முன்மொழிந்தபோதும் தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் அனுப்பிவிட்டு, பிறகு அப்படியொரு கூட்டமே திட்டமிடமில்லை என அறிவித்ததையும் சந்தேகத்தோடு கவனிக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.
“தம்பிதுரையின் கோபத்திற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில், ‘தங்களது தலைமையில் நாடு எல்லா வளங்களையும் பெற்றும் முன்னேற்றம் அடைய வாழ்த்துவதாக’ தெரிவித்திருந்தார். இதுதான் கார்டன் வட்டாரத்தைக் கொதிக்க வைத்துவிட்டது. ‘ அடுத்தடுத்த ரெய்டுகளால் நம்மை வழிக்குக் கொண்டு வரும் வேளையில் மத்திய அரசு செயல்படுகிறது. மற்ற மாநில முதலமைச்சர்களே அமைதியாக இருக்கும்போது, இவர் எதற்கு தேவையில்லாமல் வாழ்த்த வேண்டும்; அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?’ எனக் கேள்வி எழுப்பினர் கார்டன் வட்டாரத்தில். இதையடுத்து, மக்களவை துணை சபாநாயகர் லெட்டர் பேடிலேயே, சசிகலாவை முன்னிறுத்தி அறிக்கை வெளியிட்டார். ‘ நீங்கள் பதவி விலகுங்கள்’ என நேரடியாகவே ஓ.பி.எஸ்ஸைப் பார்த்துக் கேட்கிறார் தம்பிதுரை. இதை உணர்ந்துதான், ‘ துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும். ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என அதிர வைத்தார் மு.க.ஸ்டாலின்” என விளக்கிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார்.
“நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஓ.பி.எஸ் முன்னால் இப்போது மூன்று விஷயங்கள் உள்ளன. நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் செல்வது; சபையைக் கலைப்பது; பதவியை ராஜினாமா செய்வது. இதில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் சென்றால், பதவியை இழக்க விரும்பாத அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்ஸுக்கு வாக்களிப்பார்கள். இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மீதமிருக்கிறது. ஆளுநரின் பிடியும் இதில் அடங்கியிருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க ஆதரவு கொடுக்கலாம். இதையெல்லாம் உணர்ந்துதான், கட்சியின் சீனியர்கள் மூலம் பன்னீர்செல்வத்திடம் தூதுப் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாகவே நாட்களைக் கடத்தி வருகிறார் அவர். அப்போலோ மருத்துவமனையில் இருந்த கடைசி நாளில், எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதுபோல, பதவியை விட்டுத் தருவது குறித்து பன்னீர்செல்வத்திடமும் கடிதம் வாங்கியிருக்கிறார்கள். நேற்று மாலை கார்டனுக்குச் சென்றபோதும், இதுகுறித்து விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. ‘ எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் முதல்வர் ஆக வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. மத்திய அரசின் துணையோடு கோட்டைக்குள் நடக்கும் விஷயங்களையும் அவர் ரசிக்கவில்லை” என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.
‘மௌனத்தைவிட மிகச் சிறந்த உபதேசம் எதுவும் இல்லை என்பார்கள். ஓ.பி.எஸ்.ஸுன் மௌனம் எதை உணர்த்துகிறது? அரசியல் காய் நகர்த்தல்களில் அவர் வீழ்வாரா? எழுவாரா?’ என்ற கேள்விகளும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
– ஆ.விஜயானந்த்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக