சனி, 21 ஜனவரி, 2017

திராவிட கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்குச் சமமானது

PawanKalyanC ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் பந்தயம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது திராவிட கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்குச் சமம் என்று ஜன சேனைக் கட்சித் தலைவரும், தெலுங்கு திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் பந்தயம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என ஜன சேனை வலியுறுத்துகிறது.
மிருக வதை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இவ்வாறான கண்டிப்பான அணுகுமுறையை அரசு கடைபிடிக்குமாயின், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி, கோழி இறைச்சி குறித்த புள்ளிவிவரங்களை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

கடந்த 2015-இல், உலகிலேயே மிக அதிக அளவாக இந்தியாவிலிருந்து 24 லட்சம் டன்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பிரேஸில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 20 லட்சம், 15 லட்சம் டன்களை மட்டுமே ஏற்றுமதி செய்கின்றன.
மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம், சுமார் ரூ. 34,112 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14 சதவீதம் அளவுக்கு உயர்வதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இறைச்சிக்காக மிருகங்கள் கொல்லப்படும் நிலையில், மிருக வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது ஆச்சரியமாக உள்ளது.
சேவல் பந்தயமானது, ஆந்திரத்தின் கலாசார அடையாளமாகும். மிருக வதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உண்மையிலேயே தீவிரம் காட்டுமானால், சுமார் 8.4 லட்சம் டன்கள் கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத் தான் தடை விதிக்க வேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக