திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு எதிராக ரகசிய முயற்சி ? வேல்முருகன் ஆவேசம் !

போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க மத்திய,மாநில அரசுகளின் ரகசிய வேலைகள்: வேல்முருகன் ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் கையிலெடுத்திருக்கின்றன. இதற்கான ரகசியவேலைகளை நேற்று இரவிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். இந்த நிலையில், கோரிக்கைகள் 90 சதவீதம் நிறைவேறியிருப்பதாகக் கூறி போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப்பாப் தமிழா ஆதி, ராஜசேகர். ராஜேஷ். அம்பலத்தார் ஆகிய ஐந்து பேர். இவர்களின் பேச்சுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொந்தளிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன், அந்த ஐந்து பேருக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவரிடம் நாம் பேசிய போது, தமிழர்களின் பன்பாட்டு அடையாளத்தையும் உரிமையையும் மீட்டு எடுக்கும் முகமாக ஜல்லிக்கட்டு நடப்பதற்கு நிரந்தர தீர்வு, காட்சிப்படுத்தும் பட்டியலிலிருந்து காளைகளை நீக்குதல், பீட்டாவுக்கு தடை என்கிற கோரிக்கைகளை முன்நிறுத்தித்தான் இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் 6,7 நாட்களாக போராடி வருகிறார்கள்.

தமிழக அரசு கண் துடைப்பாக கொன்டு வந்துள்ள அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் என மறுதலித்திருக்கிறார்கள். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாத நிலையில் மேற்கண்ட ஐந்து பேரும் போராட்டம் வெற்றியடைந்துவிட்டதாகவும், போராட்டத்தை விலக்கிக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது ? அரசியல்வாதிகள். சினிமாக்காரர்கள் யாரும் வரக்கூடாது என சொல்லிவிட்டப்பிறகு ஹிப்பாப் தமிழா என்ற நபர் மைக் பிடித்து பேசும் உரிமையை யார் தந்தது? போராட்டத்தை திசைத்திருப்பவும் போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கவும் மத்திய மாநில அரசுகளின் கைக்கூலியாக இவர்கள் வளைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது பேச்சை யாரும் நம்பக்கூடாது.

ஜனாதிபதி கையொப்பம் போட்டுவிட்டாலே அது நிரந்தர சட்டம் என்றால், சட்டப்பேரவையில் வைத்து சட்டமுன்வடிவை தாக்கல் செய்வது எதற்கு ? அவசர சட்டம் போட்டாயிற்று என்று சொல்லும் அரசுகள் , சட்டத்தில் என்ன திருத்தம் செய்தீர்கள் ? காட்சிப்படுத்தும் பட்டியலிருந்து காளைகளை நீக்கும் ஷரத்துகள் சேர்க்கப்பட்டனவா? என்பதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

அவசர சட்டத்தைக்கூட மூடு மந்திரம் போல் வைத்திருக்கும் மர்மம் என்ன? இவைகளுக்கெல்லாம் எந்த விடையும் தெரியாத நிலையில் போராட்டம் வெற்றி என ஐந்து பேரும் சொல்வது எப்படி ?

சொல்லச்சொல்லி யார் வற்புறுத்துகின்றனர்? மத்திய மாநில அரசுகள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் தங்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ளதா என போராட்டக்காரர்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதில் வரும் முடிவுகள் தான் போராட்டம் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சொல்லும்.

அதுவரை உளவுத்துறைகளின் குரலாக எதிரொலிக்கும் ஐந்து பேரின் பேட்டிகளை நம்பக்கூடாது. இது வரை போராட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். அதனால், கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டம் வாபஸ் பெறக்கூடாது என் ஆவேசமாக கூறுகிறார் வேல்முருகன். - இளையர்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக