வியாழன், 26 ஜனவரி, 2017

தாமிரபரணியை காக்க வாருங்கள்! விவசாயம் காக்க முகநூலில் கோரிக்கை!


தென் தமிழகத்தின் முக்கிய நதியான தாமிரபரணியை பாதுகாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன. தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தோன்றி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது.
தென் தமிழகத்தின் முக்கிய நதியாகவும், வற்றாத நதியாகவும் தாமிரபரணி நதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாநில மக்களின் விவசாயத் தேவையையும், குடி தண்ணீர் தேவையையும் இந்த நதிதான் பூர்த்தி செய்துவருகிறது. தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி மற்றும் கோக் ஆலைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சில மாதங்களுக்குமுன் தடை விதித்தது.

திருநெல்வேலி கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா குளிர்பான கம்பெனி இயங்கி வருகிறது. தொடக்கத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதி பெற்று படிப்படியாக, ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்க ஆரம்பிக்க பிரச்னை ஆரம்பமானது. இதே சிப்காட் வளாகத்தில் பெப்சி கம்பெனிக்கும் 36 ஏக்கர் ஒதுக்கப்பட்டு அதுவும் தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்ச அனுமதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பிரபாகர் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் முடிவில், பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதித்து அதிரடி உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், முகநூலில் உள்ள இளைஞர்கள் தென் தமிழ்நாட்டின் நீராதாரமான தாமிரபரணியை வெளிநாட்டு குளிர்பானங்கள் சுரண்டுவதற்கு எதிராகவும், விவசாயிகளின் நலம் காக்கவும் போராட்டத்தைக் கையில் எடுத்து வருகிறார்கள். இதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்கள். இந்தக் கோரிக்கைகள் வைரலாக முகநூலில் பரவிவருகிறது. அந்தக் கோரிக்கைகள்:
போராட்டக் களத்தை மாற்றுங்கள்!
ஒரே இடத்தில் கூடி நின்று செய்வது மட்டும் போராட்டம் இல்லை!
இப்படியும் போராடலாம்:
1. அந்நிய நாட்டு குளிர்பானங்கள் மற்றும் பொருட்களை முடிந்தவரையில் தவிருங்கள்.
2. உங்களால் முடிந்த வரை நடைபாதை வியாபாரிகளிடம் காய்கறி மற்றும் பழங்களை வாங்குங்கள்.
3. ஏழை விவசாயிகளுக்கு உங்கள் நண்பர்களோடு சேர்ந்து எவ்வகையில் உதவ முடியும் என்று பாருங்கள்.
4. நாட்டு மாடு, கோழி, ஆடு போன்றவைகளை வாங்கிக் கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு உதவுங்கள்.
5. பாக்கெட்டில் வரும் பாலை நிராகரித்து, நம் பால்காரர்களிடம் அதை வாங்குங்கள். ஒரு கிராமத்துக்கு ஒரு நாட்டு மாடு பால்பண்ணை அமைத்து, அருகில் உள்ள நகர மக்களிடம் வியாபாரம் செய்ய வழிவகுத்தல்.
6. ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு சிறு தொழில் கற்க கை கொடுங்கள்.
7. நண்பர்களை சேர்த்துக் கொண்டு உங்கள் ஊரில் உள்ள கருவேல மரங்களை வேரோடு அகற்றிவிட்டு, நம் பாரம்பரிய வேம்பு, புங்கை, ஆல மரங்களை நட்டுவைத்துப் பராமரியுங்கள்.
8. இளைஞர்கள் ஒரு குழு அமைத்து, ஒரு குழுவுக்கு ஒரு கிராமம். அதில், நீர்நிலைகளை தூர்வாருதல், நாட்டு மாடுகள் பற்றிய விழிப்புணர்வு, மரங்கள் நட்டு, விவசாயிகளுக்கு விவசாயம் தவிர, சிறு தொழில் செய்ய ஏற்பாடு செய்தல்.
என்பதான நிபந்தனைகளை வைத்து இளைஞர்கள் முகநூலில் பதிவு செய்துள்ளனர். முதலில் பெப்சி, கோக் ஆகியவற்றுக்கு தடை விதித்து வணிகர்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக