வெள்ளி, 27 ஜனவரி, 2017

திருநாவுக்கரசர் :தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம் .. ராகுல் வர்ற நேரம் இவரு காங்கிரசை விட்டு போயிடாம இருக்கணுமே?


உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு நீக்கம், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில் , 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் மூலம் பணத்தின் மதிப்பை மட்டுமல்ல, நாட்டின் மதிப்பையே பிரதமர் மோடி இழக்கச்செய்துள்ளார். அவரது தவறான நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி 1.5 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் தேக்கநிலை ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. அனைத்துத் தரப்புமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்புப்பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார். நவம்பர் 8 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை எவ்வளவு கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் பிடிபட்டன என்பதை மோடி அறிவிக்க மறுக்கிறார். இதன் மூலம் இந்தத் திட்டம் தோல்வி அடைந்து விட்டதை மறைமுகமாக மத்திய பாஜக அரசு ஒப்புக் கொண்டு விட்டது. பணமதிப்பு நீக்கம் ஒரு நீண்டகால பிரச்னை. எனவே, இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் பிப்ரவரி மாதம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்த இருக்கிறோம். இதில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். வரும் 31-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் ஒரு நாள் முழுவதும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதும், வன்முறையில் ஈடுபட்டதும் கடும் கண்டனத்துக்குரியது. தவறு செய்த காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தி என்னிடம் 2 மணி நேரம் கேட்டறிந்தார். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். 5 மாநில தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி அவர் காரில் பயணித்து மக்களைச் சந்திக்க இருக்கிறார்.இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக