வெள்ளி, 6 ஜனவரி, 2017

புதுவை முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ஆளுநர் கிரண் பேடி மறுத்தார்!

புதுச்சேரி அரசின் கட்செவி அஞ்சல், (வாட்ஸ்அப்) சுட்டுரைப் பதிவு டுவிட்டர்), முகநூல் (பேஸ் ஃபுக்) போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து, ஆளுநர் கிரண் பேடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுவை மாநிலத்தின் ஆளுநர் கிரண் பேடி பொதுமக்கள் பிரச்னைகள், அரசுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஏதுவாக அனைத்து அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த கட்செவி அஞ்சல் குழுவை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரி ஒருவர் ஆபாச விடியோக்களை கட்செவி அஞ்சலில் வெளியிட்டதாக எழுந்த பிரச்னையையடுத்து, கடந்த திங்கள்கிழமை அனைத்து ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியாளர் நலத் துறை மூலம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு சார்புடைய கட்செவி அஞ்சல் குழுக்கள், சுட்டுரைப் பதிவு, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உடனே வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

மேலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தலைமைச் செயலரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள் இடம் பெறத் தடை விதித்து முதல்வர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து, ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அரசுப் பணியாளர் நலத் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, தற்போது பின்பற்றப்படும் வழிகாட்டுதல்கள், விதிகள், கொள்கைகளுக்கு முரணாக உள்ளதால், அது செல்லாது என அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருகிறது என்று ஆளுநர் கிரண் பேடி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்  தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக