புதன், 25 ஜனவரி, 2017

மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார்? ஒரு கோடி கொடுத்தா...: சீமான் கேள்வி

அரசியல்வாதிகளுக்கும், திரையுலகினருக்கும் அனுமதியில்லாத மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.
>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை கடுமையாக தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை கண்டித்து இன்று, நாளையும் கண்டன போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே 27ஆம் தேதி கண்டன போராட்டம் நடத்துகிறோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.


மாணவர்களை முதல் அமைச்சர் அல்லது துறை சார்ந்த அமைச்சர்களோ சந்தித்து பேசியிருக்க வேண்டும். அவர்கள் பேசவில்லை. அது மிகவும் வேதனைக்குரியது. தமிழர்கள் இளிச்சவாயர்கள்தான் என்று நினைக்கிறார்கள். அது கச்சத்தீவு பிரச்சனையானாலும் சரி, ஈழத்தமிழர்களின் பிரச்சனையானாலும் சரி, காவேரி பிரச்சனையானாலும் சரி, தமிழனுக்கு இந்த நிலைதான் ஏற்படுகிறது.

மாணவர்களின் போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போராட்டம் நடத்த வைத்திருக்கிறது. 1965ல் நடந்த மொழிப்போருக்கு பின்னர் தற்போது மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய புரட்சி ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அறவழியில் நடந்த மாணவர்களின் மெரினா போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது போலீஸ்தான். ஆட்டோக்களுக்கு தீ வைத்தது காவல்துறைதான். இது தொடர்பாக அனைத்து வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது. நமது தமிழ் மாணவிகளை கூட பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தில் எந்தவித அரசியலும் இல்லை. அரசியல் சாயமும் பூசப்படவில்லை. ஆனால், அதே மாணவர்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால், எந்த நிலையிலும் தங்களது அரசியல் முகத்தை வெளிப்படுத்தவில்லை. ஜல்லிக்கட்டை மத்தியில் முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சிதான் தடை செய்தது. அப்போதே நாங்கள் தடையை கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினோம். மாணவர்கள் இந்த 6 நாள் அமைதி போராட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையும் தாண்டி உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

மாணவர்கள் போராட்டத்தில் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அவர்கள்தான் முடித்து வைக்க வேண்டும். அதை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார். ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் முடித்து வைக்கணும் என்று சொல்கிறாரா.
போராட்டத்தில்தான் நடிகர், நடிகைகளை அனுமதிக்கவில்லையே. இந்த நிலையில் போராட்டத்தை முடித்து வைக்க இவர் யார் என பேட்டியை முடித்துக்கொண்டார்.
;பரமசிவன்  ;படம்: ராம்குமார்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக