வியாழன், 5 ஜனவரி, 2017

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்!


kolathoor mani salem
கீற்று :சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம் 24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் :
வேதங்கள் - பகவத்கீதை - மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும்.
வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் - சமணர் - புத்தர் - சித்தர்கள் - வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது.
இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி - கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை, சக இந்துக்களான  பார்ப்பனர் அல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்துகொள்ள மறுத்தது.
இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக வரலாற்றில் உருவானது தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் இப்பொழுது இந்து என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், வெகுமக்களுக்கும் கிடைத்துள்ள பல உரிமைகள் வேத மத மரபை எதிர்த்து நடத்திய போராட்டங்களினால் தான் என்பதை நமது மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உருவ வழிபாட்டை மறுத்த வேத மரபு, கோவில்களை கையகப்படுத்தியது; வேத மரபுக்கு எதிரான உருவ வழிபாடு நடக்கும் கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்ற பார்ப்பனரல்லாதாரின் அம்மன் கோயில்களையும் அங்கே பொருளாதர வளம் மிகுந்த போது தங்கள் வசமாக்கிக் கொண்டுவிட்டது. வேதத்தை மட்டுமே வணங்கும் ஸ்மார்த்த பார்ப்பன காஞ்சி சங்கர மடம் காஞ்சி காமாட்சி கோவிலை கையகப்படுத்திக் கொண்டது. வேத வழிபாட்டை மறுத்த வடலூர் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை இந்து அடையாளமாக்கி இந்து அற நிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது.
பெரும் சொத்துக்கள் செல்வங்களைக் கொண்ட தில்லை நடராஜன் கோவிலை நிர்வகிக்கும் உரிமை தீட்சதர்களுக்கே உள்ளது என்றும் தாங்கள் நேரடியாக ‘ஆண்டவனால்’ அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்து தீர்ப்பையும் தங்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொண்டு விட்டார்கள்.
தங்களுக்குள்ளே பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட வேத மதம் அதற்கு மாறாக இப்படி கோவில்களை தங்கள் வசமாக்கிக் கொண்டு விட்டது. கர்ப்பகிரகத்தில் அர்ச்சனை செய்யும் உரிமையும் தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்களில் சங்கராச்சாரிகளையே உள்ளே அனுமதிக்காத காலம் இருந்தது; இருக்கிறது. கோவிலுக்குள் நுழையும் உரிமை ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு (பிராமணர்களுக்கு) கிடையாது என்பதற்கு இது சான்று. இப்படி ஏராளமாக பட்டியலிட முடியும்.
வேத மரபுக்கு எதிராக நமது முன்னோர்களான, சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், புத்தர் வள்ளலார் தொடங்கிய போரை, பெரியார் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். வடபுலத்தில் துக்காராம், கபிர்தாசர், குருநானக், ஜோதிபாபுலே, அம்பேத்கர் போன்றோர் தொடர்ந்து போராடினார்கள். நமது முன்னோர்கள் தொடங்கிய போர் இன்னும் முடிவடையவில்லை வேத மரபு புதிய புதிய அவதாரங்களில் தனது ஆதிக்கத்தை - சமூக சுரண்டலை உறுதிப்படுத்தி வருகிறது.
எந்த வேத மரபு நமது மக்களை அடிமைப்படுத்தியதோ, அதே வேத பார்ப்பனியம் நமது தமிழர் பண்பாட்டில் ஊடுருவி இப்பொழுதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. தமிழர் வீட்டு திருமணங்களில், தமிழர் வழிபாட்டு முறைகளில் தமிழர்கள் பெயர் சூட்டலில், தமிழக வீடு திறப்பில், சடங்குகளில் பார்ப்பன புரோகிதமே ஆதிக்கம் செலுத்தி, தமிழ் மொழியையும் தமிழினத்தின் மாண்புகளையும் அவமதித்து வருகிறது. அதே வேத மத சக்திகள் தான் இப்போது ஆட்சி அதிகாரத்தின் வழியாக “இந்துத்துவம்” என்ற அரசியல் முழக்கத்தோடு - சமஸ்கிருத வேத பண்பாடுகளை திணிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதோடு மட்டுமின்றி தமிழ் நாட்டையும் தனது அரசியல் அதிகாரத்திற்குள் கொண்டு வரும் சூழ்ச்சிகளில் இறங்கியிருப்பதை தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கிறோம்.
இந்த நிலையில் வேத புரோகிதத்தை அனைத்து நிலைகளிலும் சமூக நிகழ்வுகளிலும் புறக்கணித்து, அதே ஆபத்துக்களை கொண்ட இந்துத்துவா அரசியல் சக்திகளையும் புறந்தள்ளி நமது தன்மான அடையாளத்தை நெஞ்சுயர்த்தி பறைசாற்றுமாறு அனைத்து தமிழ் மக்களையும் இம் மாநாடு அறை கூவி அழைக்கிறது.
வேத மரபை மறுப்போம் - வெகுமக்கள் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தை தன்மான தன்னுரிமைக்கான முழக்கமாக்கி மக்களை அணி திரட்ட இந்த மாநாடு உறுதி ஏற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக