புதன், 18 ஜனவரி, 2017

நடிகர் விஷால் அவர்களே! இந்த போராட்டத்தை வைத்து பப்ளிசிட்டி பிழைப்பு நடத்த வேண்டாம்:சுரேஷ் காமாட்சி காட்டம்…


thetimestamil.com: விஷால் அவர்களுக்கு,
இந்தச் சமூகம் பல இழிவு நிலைகளை கடந்து வந்திருக்கிறது.
எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம்.
எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது.
எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது.
எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள்.
மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள்.
அய்யா இது எங்கள் போராட்டம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நடுவில் நான் போய் மோடியைப் பார்க்கிறேன் என்று கிளம்புகிறீர்கள். நாளை இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது இருக்க வேண்டும்.
நான் டில்லியில் கடிதம் கொடுத்தேன். சல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அவமானம் எங்களுக்குத் தேவையில்லை.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் திட்டம் போட்டு நீங்கள் காய் நகர்த்த நினைக்கும் காரிய சாதிப்பு எம் இளைஞர்கள் மத்தியில் வேலைக்காகாது என்று உணர்ந்துகொள்ளுங்கள்.
இன்றுவரை நீங்கள் பீட்டாவில் இருக்கிறீர்கள் என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வரவேயில்லையா? இல்லை அதை மறுப்பதற்கு நீங்கள் கூப்பிட்டதும் ஓடோடி வரும் மீடியா கிடைக்கவில்லையா?
இன்று சந்திப்பில் சொல்லிய அனைத்தையும் ஆறு மாசத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாமே? எம் மக்கள் திரண்டதைக் கண்டதும் பயம் வந்து பேட்டிகொடுத்துவிட்டீர்கள்.
சரி இப்போவாவது சொன்னீர்களே.. இனி உங்களைப் போன்ற இரட்டை வேட நாடகமாடிகளின் ஆதரவு தேவையில்லை.
நீங்கள் யாராகயிருந்தாலும் அதை நாங்கள் இனவேறுபாடு பார்க்காமல் இந்த நிலத்தில் நடிகர் என்ற மரியாதையை தந்திருக்கிறோம். அதை நல்ல படங்களில் நடித்து நடிகர் சங்க வேலைகளை கவனித்து நகருங்கள். உங்கள் வேலை அதுமட்டும்தான்.
எங்கள் மக்களின் புரட்சியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இது எதைக்கட்டி இறக்கினாலும் அமைதியாய் அலையோடு நிறுத்திக்கொள்ளும் ஆழ்கடல் அல்ல. அமைதியை உடைத்து சுனாமியாக மாறும் சீற்றமும் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு ஓரமாய் போய் நின்று வேடிக்கைப் பாருங்கள்.
இனி எங்கள் தேவைகளை நாங்களே போராடிப் பெற்றுக்கொள்வோம். நீங்கள் இந்த போராட்டத்தை வைத்து பப்ளிசிட்டி பிழைப்பு நடத்த வேண்டாம்.
மீடியா நண்பர்களே.. எதற்கெடுத்தாலும் விஷால் கூப்பிட்டாருன்னு ஓடாதீங்க. அவர் என்ன முதல்வரா இல்லை மக்கள் பிரதிநிதியா?
அவர் ஒரு நடிகர் சங்க செயலாளர் அவ்வளவுதான். அவர் நடிகர் சங்கத்தைப் பற்றிப் பேசினால் எடுத்து கொட்டை எழுத்தில் போடுங்கள். நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பற்றி அவரிடம் தயவுசெய்து கேட்காதீர்கள். அவர் கூப்பிட்டுப் பேசினாலும் போடாதீர்கள். அவருக்கு பேட்டியளிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேளுங்கள்.
இன்னமும் என் சமூகத்தை நேசித்து ஆளும் தகுதியுள்ளவர்களின் பேச்சை எடுத்துப் போடுங்கள். இல்லையேல் மக்கள் அவர்களே ஒரு மீடியாவாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இன்றைய சல்லிக்கட்டு தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றியிருக்கிறது.
அது திரு. விஷால் அவர்களே, இந்த சல்லிக்கட்டுப் போராட்டம் உங்களைப் போன்ற விலங்கு நேசிகளை பதட்டமடையச் செய்திருக்கிறது என்ற உண்மையை இதன்மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.
நீங்கள் மட்டுமல்ல.
இந்த தேசமே மக்கள் புரட்சி என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி ஒருபோதும் தோற்றதே இல்லை. புரிந்து உங்கள் தகுதி பார்த்து பேசுவதோ பேட்டிக்கொடுப்பதோ இருக்கட்டும்.
மற்றவை எம் இளைஞர்கள் கையிலும் மாணவர்கள்
கையிலும் இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
நன்றி!
சுரேஷ் காமாட்சி,
திரைப்படத் தயாரிப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக